1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : திங்கள், 22 டிசம்பர் 2014 (20:46 IST)

’56 இஞ்ச் மார்பகம் தேவையில்லை, 4 இஞ்ச் இதயம் போதும்’ - மோடி குறித்து எதிர்கட்சிகள் விமர்சனம்

பாராளுமன்றத்தில் பங்கெடுப்பதற்கு 56 இஞ்ச் மார்பகம் தேவையில்லை, 4 இஞ்ச் இதயம் போதும் என்று மதமாற்றம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
 
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா அருகே கடந்த 7ஆம் தேதி, 57 முஸ்லிம்கள் மதமாற்றம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் இன்று எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பின. அதற்கு மத்திய அரசு, இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது.
 
இது தொடர்பாக டெல்லி மேலவையில், விவாதம் நடத்தப்பட்டது. அந்த விவாதத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி சபைக்கு வந்து பதில் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

இதனால் அவை 5 நாட்களாக தொடர்ந்து முடங்கியது. இன்றும் மதமாற்றம் பிரச்சனை, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேச்சு மாநிலங்களையில் எழுந்தது. கடும் அமளி காரணமாக அவை அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டது.
 
மீண்டும் அவை தொடங்கப்பட்டபோது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் டி.ராஜா கூறுகையில், "பிரதமர் கண்டிப்பாக இதற்கு விளக்கமளிக்க வேண்டும். இவை எல்லாம் நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும், ஒருங்கிணைப்பிற்கும் அச்சுறுத்தலாக அமையும்” என்று தெரிவித்தார்.
 
பிரதமர் மோடியை குறிப்பிட்டு பேசிய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் டெரெக் ஒ’பிரையன், ”பாராளுமன்றத்தில் பங்கெடுப்பதற்கு உங்களது 56 இஞ்ச் மார்பு தேவையில்லை; உங்களது 4 இஞ்ச் இதயம் போதும்," என்று விமர்சித்துள்ளார்.