வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Modified: வெள்ளி, 30 ஜனவரி 2015 (13:13 IST)

ஜெயந்தி நடராஜன் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவிப்பு

முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாகவும் வேறு கட்சியில் சேரும் எண்ணம் இல்லை என்றும் அறிவித்துள்ளார்.
 
இது குறித்து ஜெயந்தி நடராஜன் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், '' இளவயது முதலே காங்கிரஸ் கட்சிக்காக உழைத்தேன். என் உடலில் காங்கிரஸ் ரத்தம் தான் ஓடுகிறது. ஆனால், நான் நம்பிய காங்கிரஸ் கட்சி தற்போது இல்லை.
 
எனது குடும்பம் முழுவதும் காங்கிரஸ் கட்சியுடன் தொடர்புடையது. நான் கலங்கம் எதுவும் இல்லாமல் எனக்கு வழங்கப்பட்ட பணிகளைச் செய்துள்ளளேன்.
 
சட்டத்தின்படியும், விதியின்படியும் நடக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டேன். இயற்கைக்கு ஊறு விளைவிக்கும் என்ற காரணத்தால் சில திட்டங்களுக்கு அனுமதி அளிக்க மறுத்தேன்.
 
இதனால்தான் வேதாந்தா உள்ளிட்ட திட்டங்களுக்கு அனுமதி அளிக்க மறுத்தேன். ஒரு நல்ல சுற்றுச்சூழல் அமைச்சராகவே நான் செயல்பட்டேன். சில ஒப்பந்தங்களை மறுத்த போது, பெரு நிறுவனங்கள் தொடர்பான விவகாரங்களில் ராகுல் காந்தி என்னை அழைத்துப் பேசினார்.
 
இதனால், பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்று சக அமைச்சர்களால் நான் எச்சரிக்கப்பட்டேன், ஆனால், பிறகு உச்ச நீதிமன்றம் அளித்த பல தீர்ப்புகள் எனது முடிவுகள் சரியானவை என்று புரிந்து கொண்டேன்.
 
மீண்டும் மேலிடத்திலிருந்து அழைப்பு வரும் என்று எதிர்பார்க்கவில்லை.அப்படி அழைப்பு வந்தாலும் மீண்டும் காங்கிரஸில் சேரும் எண்ணம் இல்லை. வேறு கட்சியில் சேரும் எண்ணம் இல்லை” என்றும் கூறியுள்ளார்.
 
ஜெயந்தி நடராஜன், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்தவர். இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பதவி விலகினார். இந்நிலையில், கட்சிப் பணிகளில் ஈடுபட ஏதுவாக அவர் ராஜினாமா செய்ததாக காங்கிரஸ் வட்டாரத்தில் கூறப்பட்டது.
 
எனினும் அப்போது நிகழ்ச்சி ஒன்றில் பேசிய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, புதிய திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் துறையிடம் ஒப்புதல் பெறுவதில் தாமதம் ஏற்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என்று கூறினார். 
 
இந்நிலையில், ஜெயந்தி நடராஜன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் ஒன்றை எழுதினார். தாம் அமைச்சராக இருந்த போது ராகுல் காந்தி குறிப்பிட்ட திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்க தம்மை நிர்பந்தித்ததாகவும், அதனை தாம் ஏற்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
 
அதானே நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்பட வற்புறுத்தப்பட்டதாக கூறியுள்ள அவர், சக அமைச்சர்கள் சிலர் நெருக்குதல் கொடுத்த போதும் சில விஷயங்களில் தாம் வளைந்து கொடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
 
இதனால் தாம் பழிவாங்கப்பட்டதோடு திட்டமிட்டு தம்மை பற்றி அவதூறு பரப்பப்பட்டதாகவும் புகார் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.