வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : புதன், 6 மே 2015 (12:44 IST)

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு: தீர்ப்பு தேதி குறித்து பரபரப்பு தகவல்

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் வரும் 11 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படலாம் என்று பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கடந்த மார்ச் 11 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.
 
இதைத் தொடர்ந்து நீதிபதி குமாரசாமி தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தார். இந்த வழக்கில் அரசு சார்பில் பவானி சிங் ஆஜரானது செல்லாது என உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. 
 
இந்த வழக்கில், ஆச்சார்யா அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். அவர் ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.
 
இந்நிலையில் இந்த வழக்கில் வரும் 11 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
இது குறித்து, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி சமூக வலைத்தளமான ட்விட்டரில், மே 11 ஆம் தேதி தீர்ப்பு வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.
 
இந்த வழக்கன் தீர்ப்பு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சனிக்கிழமை நீதிபதி குமாரசாமி வெளியிடுவார் என்று கூறப்படுகிறது.
 
ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமீன் 12 ஆம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில், இந்த வழக்கில் 11 ஆம் தேதி தீர்ப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.