1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: புதன், 14 டிசம்பர் 2016 (15:59 IST)

சொத்தை உறவினர் பெண்ணுக்கு எழுதி வைத்த ஜெயலலிதா - பரபரப்பு தகவல்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஹைதராபாத்தில் உள்ள தனது சொத்தை, அவரின் உறவுக்கார பெண் ஒருவருக்கு எழுதி வைத்துள்ள விவகாரம் தற்போது வெளியே கசிந்துள்ளது.


 

 
உடல் நலக்குறைவு காரணமாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 5ம் தேதி மரணம் அடைந்தார். அவருக்கு போயஸ் கார்டன் வீடு மட்டுமில்லாமல், கொடநாடு மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் அவருக்கு சில சொத்துக்கள் உள்ளது. அந்த சொத்துக்கள் யாருக்கும் செல்லும் என்ற எதிர்பார்ப்பு பலரிடம் எழுந்துள்ளது.
 
இந்நிலையில், ஹைதராபாத் மேச்சல் பகுதியில் உள்ள ஒரு சார்பதிவாளர் அலுவலகத்தில் ஜெயலலிதாவின் உயில் ஒன்று உள்ளது. அந்த உயில் 2000ம் ஆண்டு ஜூலை 14ம் தேதி பதிவு செய்யப்பட்டுள்ளது. 
 
அதாவது. ஜெயலலிதா நடிகையாக இருந்த போது, ஹைதராபாத் பேட்பஷிராபத் எனும் பகுதியில் உள்ள  ஜி.டி.மெட்லா எனும் இடத்தில் 4 ஏக்கரும், ஹோம்பள்ளி எனும் இடத்தில் 7 ஏக்கர் நிலமும் வாங்கியுள்ளார். ஜெ.ஜெ. கார்டன் என பெயரிடப்பட்ட அந்த நிலத்தில் காம்பவுண்டு சுவர் எழுப்பப்பட்டுள்ளது. அந்த தோட்டத்தில் ஒரு விருந்தினர் இல்லமும் கட்டப்பட்டுள்ளது.


 




 
அந்த இடத்தைத்தான் ஜெயலலிதா தனது ரத்த சொந்தத்தில் உள்ள ஒரு உறவுக்கார பெண்ணின் பெயரில் எழுதி வைத்துள்ளார். அவர் மீதான சொத்துகுவிப்பு வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றபோது, சார் பதிவாளர் அந்த உயிலுடன் பல முறை சி.பி.ஐ நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.
 
ஆனால், அந்தப் பெண் குறித்த தகவலை சார் பதிவாளர் அலுவலகம் வெளியிட மறுத்துவிட்டது. சம்பந்தப்பட்ட அந்த பெண் வந்து கேட்கும்போது அந்த உயிலை கொடுத்து விடுவோம் என அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
 
அந்த இடம் தற்போது மாதம் ரூ.25 ஆயிரத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. அங்கு ராமகிருஷ்ண ராஜூ என்பவர் காய்கறி மற்றும் எலுமிச்சை பழங்களை பயிர் செய்துள்ளார்.
 
2007ம் ஆண்டு ஜெயலலிதா அந்த தோட்டத்திற்கு வருடத்திற்கு ஒருமுறை சென்றுள்ளார். ஆனால், அதன்பின் அவர் அங்கு செல்லவே இல்லை.