வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: புதன், 1 ஜூலை 2015 (17:47 IST)

விக்கிப்பீடியாவில் நேருவை பற்றிய தகவலை திருத்த மத்திய அரசு முயற்சி: காங்கிரஸ் குற்றச்சாட்டு

விக்கிப்பீடியாவில் இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு பற்றிய தகவல் மத்திய அரசு அலுவலகத்தின் கணிணி ஐபி முகவரி மூலம் திருத்தப்பட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
 

 
விக்கிப்பீடியா இணையதளத்தில் முன்னாள் பிரதமர் நேருவின் குடும்பத்தினர் சிலரை பற்றிய தகவல்கள் ஜூன் 26 ஆம் தேதி திருத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திருத்தம் மத்திய அரசுக்கு சொந்தமான இணையதள முகவரி (ஐ.பி. அட்ரஸ்) மூலம் செய்யப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. எனினும் யாரால் இந்த தகவல் திருத்தம் செய்யப்பட்டது என்பது தெரியவில்லை. இந்த திருத்தப்பட்ட தகவலின் படி நேருவின் தாத்தாவான காங்காதர் பிறப்பால் முஸ்லீம் எனவும் அவரது பெயர் கிசாதின் கசாய் என்றும் பிரிட்டிஷ்காரர்கள் பிடியில் இருந்து தப்பிப்பதற்காக இந்துவாக மாறி தனது பெயரையும் கங்காதார் எனவும் மற்றிக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அதேபோல், நேருவுக்கும் எட்வினா மவுண்ட் பேட்டனுக்கும் இடையே உள்ள நட்புறவு குறித்தும் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.நேரு குறித்த விபரங்கள் திருத்தப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி  கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அரசின் ஐ.பி. முகவரியில் இருந்தே திருத்தப்பட்டுள்ளதால், காங்கிரஸ் தலைவர்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக மத்திய அரசு தான் இத்தகைய திருத்தங்களை செய்துள்ளது என காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
 
இது குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா கூறியதாவது:-
 
விக்கிப்பீடியாவில் ஜவஹர்லால் நேரு மற்றும் மோதிலால் நேரு குறித்த தகவலை மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜவஹர்லால் நேரு முஸ்லீம் என காட்டவும் ஒரு கெட்ட நோக்கத்துடன் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேரு இந்தியர்,   இந்துவா அல்லது முஸ்லீமா என்பது ஒரு விஷயமே இல்லை. விக்கிப்பீடியாவில் திருத்தம் மேற்கொள்ள நடந்த முயற்சி குறித்து அரசு முழு விசாரணை நடத்த வேண்டும். இந்த திருத்தங்கள் தேசிய தகவல் மையம் என்னும் என்.ஐ.சி. மூலமாகவே செய்யப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும் இந்த திருத்தங்கள் அனைத்தும் விக்கிப்பீடியாவின் ஆன்லைன் எடிட்டர்கள் மூலம் அழிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.