வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Modified: வெள்ளி, 22 மே 2015 (12:28 IST)

ஜனதா கட்சிகளுக்கு எதிர்காலம் இல்லை - ராம்விலாஸ் பஸ்வான்

ஜனதாவைச் சேர்ந்த 6 கட்சிகள் ஒன்றாக இணைய முடிவு செய்து பல மாதங்கள் ஆகிவிட்ட போதிலும், அவர்களுக்கான ஒரு கொடியோ, சின்னமோ இதுவரை அறிவிக்க முடியவில்லை. எனவே, அவர்களுக்கு எதிர்காலம் இல்லை என மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் கருத்து தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து, சென்னையில், நுகர்வோர் விவகாரம், உணவு, பொது விநியோகத்திற்கான மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் செய்தியாளர்களிடம் கூறிதாவது:-
 
உணவுப் பாதுகாப்பு மசோதாவை, தற்போது 11 மாநிலங்கள் ஏற்றுக் கொண்டுள்ளன. இனி வரும் காலங்களில் அனைத்து மாநில அரசுகளும் ஏற்றுக் கொள்ளும் என எதிர்பார்க்கிறோம்.
 
நுகர்வோர் நீதிமன்றங்களை வலுப்படுத்துவது, நுகர்வோர் சட்ட விதிமுறைகளை எளிமைப்படுத்துவது, நுகர்வோர் நீதிமன்றங்களில் வழக்கறிஞர்களின் அவசியம் இல்லாத வகையில் மாற்றம் கொண்டுவருதல் போன்றவை குறித்து ஆலோசனை செய்து வருகிறோம்.
 
நுகர்வோரின் பாதுகாப்பை உறுதி செய்ய, தற்போது 90 வகையான பொருள்களுக்கு இந்திய தர நிர்ணய சான்றிதழ் பெறுவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்த எண்ணிக்கையானது வரும் காலத்தில் அதிகரிக்கப்படும்.
 
ஜனதாவைச் சேர்ந்த 6 கட்சிகள் ஒன்றாக இணைய முடிவு செய்து பல மாதங்கள் ஆகிவிட்டது. இதற்கான ஒரு கொடியோ, சின்னமோ இதுவரை அறிவிக்கமுடியவில்லை. எனவே, இவர்களுக்கு எதிர்காலம் இல்லை.
 
பீகாரில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில், பாஜக தலைமையிலான கூட்டணி கட்சிகள் அதிக இடங்களில் வெற்றி பெறும் என்றார்.