வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: புதன், 15 ஏப்ரல் 2015 (19:15 IST)

ஜனதா பரிவாரை சேர்ந்த 6 கட்சிகள் இணைந்து புதிய கட்சி: முலாயம் சிங் தலைவராக தேர்வு

ஜனதா பரிவாரை சேர்ந்த 6 கட்சிகள் இணைந்து புதிய கட்சி துவங்கியுள்ளது. இக்கட்சியின் தலைவராக முலாயம் சிங் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
 

 
காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா கட்சிகளுக்கு மாற்றாக வலுவான கட்சி ஒன்றை உருவாக்க சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங், ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் உள்ளிட்ட முன்னாள் ஜனதா பரிவார் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர். இந்த ஆண்டின் பிற்பகுதியில் பீகார் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
 
2017ஆம் ஆண்டில் உத்தரப் பிரதேச மாநில சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. பாரதீய ஜனதாவுக்கு செல்வாக்கு பெருகி வருவதால் இக்கட்சிகள் கலக்கம் அடைந்துள்ளன. பீகார் மாநில சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற இருப்பதால், அதற்கு முன்னதாக புதிய கட்சியை உருவாக்க வேண்டும் என்பதில் ஜனதா பரிவார் தலைவர்கள் மும்முரமாக உள்ளனர்.
 
இதுதொடர்பான முக்கிய ஆலோசனை கூட்டம் டெல்லியில் உள்ள முலாயம் சிங்கின் இல்லத்தில் இன்று  நடைபெற்றது. இதில் முலாயம் சிங், லாலு பிரசாத், நிதிஷ் குமார், ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத்யாதவ், தேவகவுடா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.  இந்த கூட்டத்தில் கட்சிகள் இணைப்பு உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில் புதிய கட்சி உருவாக்கப்பட்டது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.
 
6 கட்சிகள் இணைந்து உருவான புதிய கட்சிக்கு முலாயம் சிங் யாதவ் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் கட்சியின் ஆட்சி மன்ற குழுவின் தலைவராகவும் முலாயம் சிங்கே இருப்பார் எனவும் சரத் யாதவ் தெரிவித்தார். மேலும், கட்சியின் பெயரும் சின்னமும் பின்னர் அறிவிக்கப்படும் என்று  தெரிவித்தார். புதிய கட்சிக்கு சமாஜ்வாடி ஜனதா கட்சி  என பெயரிட முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜகவை வீழ்த்துவதே புதிய கட்சியின் நோக்கம் என்று டெல்லியில் 6 கட்சிகளின் இணைப்பு கூட்டத்தில் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்தார்.