1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: ஞாயிறு, 14 செப்டம்பர் 2014 (13:58 IST)

ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல் தள்ளிவைப்பு?

ஜம்மு காஷ்மீரில் வெள்ளப்பெருக்கின் சேதம் மிகக் கடுமையாக இருப்பதால், வரும் ஜனவரியில் சட்டமன்றத் தேர்தல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
ஜம்மு காஷ்மீரில் தற்போது ஆட்சியில் இருக்கும் ஒமர் அப்துல்லா தலைமையிலான அரசின் பதவிக்காலம் வரும் ஜனவரியில் முடிவடைகிறது. இதனையடுத்து அங்கு தேர்தல் நடத்துவது குறித்து, தேர்தல் ஆணைய அதிகாரிகள் இந்த வாரம் ஜம்மு காஷ்மீரில் ஆய்வு செய்ய திட்டமிட்டிருந்தனர். ஆனால், வெள்ளப்பெருக்கு காரணமாக அந்தப் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
 
வெள்ள பாதிப்புகளை சரிசெய்ய பல மாதங்கள் பிடிக்கும் எனக் கூறப்படுகிறது. இந்தக் காலகட்டத்தில் மாநில அரசு, பேரிடர் நிவாரணக் குழுவினருடன் இணைந்து பணியாற்ற வேண்டியிருப்பதால், சட்டமன்றத் தேர்தல் ஏற்பாடுகளைச் செய்வதில் சிக்கல் ஏற்படும் எனத் தெரிகிறது.
 
எனவே, ஜனவரிக்குப் பின்னர், ஒரு சில மாதங்களுக்கு ஜம்மு காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.