செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Geetha Priya
Last Updated : வெள்ளி, 11 ஜூலை 2014 (16:08 IST)

இது முடிவல்ல, வெறும் துவக்கம் தான் - அருண் ஜெட்லி

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அர‌சி‌ன் முதல் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நிதியமைச்சர் அருண் ஜெட்லி செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், இது அவரது பயணத்தின் முடிவல்ல, துவக்கம் தான் எனத் தெரிவித்துள்ளார்.
2014-15 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் ஜூலை 10ஆம் தேதி தாக்கல் செய்த நிதியமைச்சர் அருண் ஜெட்லி செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், இந்திய பொருளாதாரம் சிறப்பான முறையில் இல்லாத சூழலை நான் சந்திக்க நேரிட்டது. இந்திய பொருளாதாரத்தின் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை குறைந்தது.
 
இந்தியாவில் முதலீடு செய்ய மக்கள் முன்வரவில்லை. இந்திய முதலீட்டாளர்களே இந்தியாவை விட்டு வேறு இடங்களில் முதலீடு செய்ய துவங்கினார்கள். உள்கட்டமைப்பு, உற்பத்தி திறன் போன்றவற்றில் வளர்ச்சி தேவைப்பட்டது. எனக்கு கொடுக்கப்பட்ட 45 நாட்களில் எதற்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும் என முடிவு செய்து இந்த நிதிநிலை அறிக்கை உருவாக்கப்பட்டது.
 
இது எனது பயணத்தின் முடிவல்ல. இதுதான் துவக்கம். நான் 7-8 பெரிய விஷயங்களை முடிக்கவேண்டுமென கருதுகிறேன். அவற்றில் பெரும்பாலானவை கடந்த அரசு விட்டுசென்ற குழப்பமான சூழலை அகற்றுவதாக தான் இருக்கிறது.
 
அவர்கள் சில முடிவுகளை எடுக்கவில்லை. அவர்கள் விட்டுசென்றவற்றில் சில முடிவுகள் எளிமையானதாக உள்ளது. சில முடிவுகளை அவர்களே கடுமையாக்கிவிட்டனர். கடந்த 45 நாட்களில் இது குறித்து நான் முடிவெடுக்க வேண்டியிருந்தது. 
 
எங்களுக்கு இரண்டு விஷயங்கள் சாதகமாக அமைந்துள்ளது, ஒன்று, நாடாளுமன்றத்தில் பாஜக விற்கு பெரும்பான்மை உள்ளது. இரண்டாவது, சர்வதேச அளவில் முதலீட்டாளர்கள் இந்தியாவிற்கு மற்றொரு வாய்ப்பு கொடுத்தனர். அவர்களின் கவனம் இந்தியாவின் மீது திரும்பும் போது, அந்த சந்தர்ப்பத்தை நாம் சரியாக பயன்படுத்த வேண்டும்.
 
அதே சமயம், இந்தியாவில் அதிக மக்கள் வறுமையில் தவித்து வருகின்றனர். வரிப்பணம் செலுத்தும் சராசரி நபரை பற்றியும் நான் யோசிக்க வேண்டும். வருமானத்தை அதிகரிக்க செய்வதுடன் செலவையும் குறைக்க வேண்டும். 
 
எனவே இந்த 45 நாட்களில், சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. பொருளாதாரம் சார்ந்த பிற விஷயங்கள் மீது வரும், மாதங்களிலும், வருடங்களிலும் முடிவுகள் எடுக்கப்படும் என்றார்.