வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Lenin AK
Last Updated : திங்கள், 13 அக்டோபர் 2014 (13:03 IST)

பி.எஸ்.எல்.வி. சி-26 ஏவுகணை - கவுண்டவுன் தொடங்கியது

பி.எஸ்.எல்.வி. சி-26 ஏவுகணை விண்ணில் செலுத்துவதற்கான 62 மணி நேர கவுண்டவுன் இன்று 13.11.14 (திங்கள் கிழமை) காலை 6.32 மணிக்குத் தொடங்கியது.
 
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), கடல்சார் ஆராய்ச்சிக்காக 7 செயற்கைக் கோள்களை விண்வெளிக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது. ஏற்கனவே 2 செயற்கைக் கோள்கள் அனுப்பப்பட்டுள்ள நிலையில் 3 ஆவது செயற்கைக் கோளாக ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-சியை, பி.எஸ்.எல்.வி. சி-26 என்ற ஏவுகணை மூலம் விண்வெளிக்குச் செலுத்த உள்ளது. 
 
இதற்கான 62 மணி நேர கவுண்டவன் இன்று 13.11.14 (திங்கள் கிழமை) காலை 6.32 மணிக்குத் தொடங்கியது. இந்த செயற்கைக்கோள் அக்டோபர் 16 ஆம் தேதி அதிகாலை 1.32 மணி முதல் 1.47 மணிக்குள் விண்ணில் ஏவப்படும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தெரிவித்துள்ளது.
 
இந்த கடல்சார் செயற்கைக்கோள் கடந்த அக்டோபர் 10 ஆம் தேதி ஏவப்படுவதாக இருந்தது. சில தொழில்நுட்பக் காரணங்களுக்காக தள்ளிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 
இயற்கை சீற்றம், இயற்கை பேரிடர் மேலாண்மை மற்றும் கடல்சார் கண்காணிப்பு ஆகியவற்றை ஆராய்ச்சி செய்யும் நோக்கத்திற்காக இந்த செயற்கைக்கோள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் அனுப்பப்படுகிறது.
 
கடந்த 2013, நவம்பர் மாதம் 5 ஆம் தேதி செவ்வாய் கிரகம் பற்றிய ஆராய்ச்சிக்காக பி.எஸ்.எல்.வி. சி-25 ஏவுகணை மூலம் மங்கள்யான் விண்கலம் ஏவப்பட்டது. அது கடந்த மாதம் 24 ஆம் தேதி செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது.
 
அதேபோன்று இந்த விண்கலமும் வெற்றிகரமாக தனது சேவையைத் தொடங்கும் என்பது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.