1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: சனி, 26 ஜூலை 2014 (16:08 IST)

பாகிஸ்தான், சீனா ஊடுருவல்: எந்த சவால்களையும் எதிர்கொள்ள இந்தியா தயார் - ராணுவ தளபதி ஜக்பீர் சிங்

இந்தியாவில் பாகிஸ்தான் மற்றும் சீனாவின் ஊடுருவல் இருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன. எல்லா சவால்களைகளையும் எதிர்கொள்ள எந்த சூழ்நிலையிலும் இந்தியா தயாராக இருக்கிறது என்று இந்திய ராணுவ தளபதி ஜக்பீர் சிங் கூறியுள்ளார்.
 
கார்கில் போர் முடிவுக்கு வந்த ஜூலை 26 ஆம் தேதி கார்கில் வெற்றி தினமாக ஆண்டுதோறும் இந்தியா நினைவு கூர்ந்து வருகிறது. அன்றைய தினம் கார்கில் போரில் உயிர்நீத்த இந்திய வீரர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்தப்படுவது வழக்கம்.
 
15-வது கார்கில் வெற்றி தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. சென்னை தீவுத்திடல் அருகே அமையப்பெற்றிருக்கும் போர் நினைவு சின்னத்தில்  இந்திய பாதுகாப்புப்படை சார்பில் கார்கில் போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடந்தது. இதில் ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளா மண்டலங்களின் ராணுவ தளபதி ஜக்பீர் சிங், பாதுகாப்புப்படை பிரிவின் அணிவகுப்புகளுக்கிடையே போரில் உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
 
அதனைத்தொடர்ந்து தமிழகம் மற்றும் புதுச்சேரி பிராந்திய கடற்படை பொறுப்பு அதிகாரி கமோடர் அமர் கே.மகாதேவன், சென்னை தாம்பரம் விமானப்படைத் தலைவர் ஏர்கமோடர் ரிப்பன் குப்தா ஆகியோர் உள்பட முப்படைகளின் சார்பாக மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் கார்கில் போர் நடந்த சமயத்தில் ராணுவத்தில் பணியாற்றிய வீரர்கள் அவர்களின் குடும்பத்தினர், என்.சி.சி., மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
 
இதுகுறித்து ராணுவ தளபதி ஜக்பீர் சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
இதே நாளில் நடந்த கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்று வெற்றிக்கொடி நாட்டியதை வரலாறு மறக்காது. இந்த வெற்றியை எண்ணி கொண்டாடும் வகையிலும், போரில் உயிர்நீத்த ராணுவ வீரர்களின் உயிர்த் தியாகத்தை எண்ணி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்த நிகழ்வு அனுசரிக்கப்படுகிறது. தற்போது இந்தியாவில் பாகிஸ்தான் மற்றும் சீனாவின் ஊடுருவல் இருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன. எல்லா சவால்களைகளையும் எதிர்கொள்ள எந்த சூழ்நிலையிலும் இந்தியா தயாராக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.