வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 9 அக்டோபர் 2015 (13:37 IST)

இந்தியா இந்து சவுதியாக மாறுகிறதா? - தஸ்லிமா நஸ்ரின் கண்டனம்

மும்பையில் சிவசேனாவின் மிரட்டலை அடுத்து பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல கஜல் பாடகர் குலாம் அலியின் இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதை அடுத்து இந்தியா இந்து சவுதியாக மாறுகிறதா என்று தஸ்லிமா நஸ்ரின் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
 

 
பாகிஸ்தானைச் சேர்ந்த புகழ்பெற்ற கஜல் பாடகர் குலாம் அலி (74). இவர் இந்திய சினிமாக்களிலும் பாடியுள்ளார். அவருக்கென்று பாகிஸ்தானிலும், இந்தியாவின் வட மாநிலங்களிலும் தனி ரசிகர் கூட்டமே உண்டு.
 
அந்த வகையில், மும்பையின் சண்முகானந்தா ஹாலில் வெள்ளிக் கிழமையன்று, குலாம் அலியின் கஜல் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மும்பை ரசிகர்களும் இந்த நிகழ்ச்சியை ஆவலுடன் எதிர் பார்த்திருந்தனர்.
 
இந்நிலையில் சிவசேனா, வழக்கம்போல பாகிஸ்தான் எதிர்ப்பு - இஸ்லாமிய எதிர்ப்பு அரசியலை கையில் எடுத்தது. பாகிஸ்தான் பாடகரான குலாம் அலியின் இசை நிகழ்ச்சியை, மும்பையில் நடத்த அனுமதிக்க மாட்டோம் என்று பகிரங்கமாக மிரட்டல் விடுத்தது.
 

 
இதற்கு இந்தியா முழுவதிலும் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. மேலும், ஆம் ஆத்மி கட்சி அவரை டெல்லியில் இசை நிகழ்ச்சியை நடத்தக் கோரி அழைப்பு விடுத்துள்ளது. இதற்கு பிரபல எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் இதை கடுமையாக விமர்சித்துள்ளார்.
 

 
இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் “அடக்கடவுளே! மும்பையில் நடக்க திட்டமிடப்பட்டிருந்த பாடகர் குலாம் அலியின் இசை நிகழ்ச்சி சிவசேனா மிரட்டலால் ரத்து செய்யப்பட்டுள்ளதா? இந்தியா, இந்து சவுதியாக மாறிவருகிறதா?” என்று குறிப்பிட்டுள்ளார்.
 
மற்றொரு டுவிட்டர் செய்தியில் “குலாம் அலி ஒன்றும் ஜிகாதி இல்லை. அவர் ஒரு பாடகர். தயவு செய்து ஒரு பாடகருக்கும், தீவிரவாதிக்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்ளுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.