வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By Veeramani
Last Updated : சனி, 19 ஏப்ரல் 2014 (16:56 IST)

ஒரு மிட்டாய்க்கு ஒரு மீட்டர் நிலம் தரும் குஜராத் அரசு - ராகுல் சாடல்

அசாம் மாநிலம், நகவுன் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பேசிய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, குஜராத்தை சேர்ந்த தொழிலதிபர் அடானிக்கு அம்மாநில அரசு அடிமாட்டு விலைக்கு விவசாய நிலங்களை விற்றதை கடுமையாக சாடினார்.
அந்த பிரச்சாரக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
 
குஜராத் முன்மாதிரி, குஜராத் முன்மாதிரி என்று மோடி தொடர்ந்து பேசி வருகிறார். அவர் என்ன செய்திருக்கிறார்? விவசாயிகளை வஞ்சித்து, சுமார் 35 ஆயிரம் ஏக்கர் விவசாய விளைநிலங்களை ஒரு மீட்டர் ஒரு ரூபாய் விலைக்கு தொழிலதிபர் அடானிக்கு வாரி வழங்கியுள்ளார். பிறகு, அதே நிலங்களை அடானி ஒரு மீட்டர் 800 ரூபாய் விலைக்கு விற்றுள்ளார்.
 
இப்படி, அரசிடமிருந்து குறைந்த விலைக்கு நிலங்களை வாங்கி, விவசாயிகளுக்கு அதிக விலைக்கு விற்றதால் 3 ஆயிரம் கோடி ரூபாய் மூலதனத்துடன் இருந்த அடானியின் நிறுவனங்கள் 4 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள நிறுவனமாக மாறியது.
 
இங்கு ஒரு மிட்டாய் (டாஃபி) ஒரு ரூபாய்க்கு விற்கிறது. நீங்கள் ஒரு மிட்டாய் தந்தால், ஒரு மீட்டர் நிலத்தை குஜராத் அரசு உங்களுக்கு கொடுத்துவிடும். நீங்கள் அடானியாக இருந்தால்..!
 
மோடி குஜராத்தின் முதலமைச்சர் ஆவதற்கு முன்னதாகவே, இங்குள்ள மக்கள் கஷ்டப்பட்டு ஜவுளி ஆலைகள் மற்றும் தொழிற்சாலைகளை ஏற்படுத்தினர். இப்போது, இந்த வளர்ச்சி எல்லாம் என்னால் தான் ஏற்பட்டது என்று மோடி பேசி வருகிறார்.
 
தன்னால் மட்டும்தான் இந்தியாவுக்கு மாற்றத்தை கொண்டுவர முடியும் என்று மோடி பேசி வருகிறார். தனி மனிதனால் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது. கோடிக்கணக்கான மக்களின் கூட்டுமுயற்சியால் மட்டுமே மாற்றத்தை கொண்டு வர முடியும் என்று ராகுல் காந்தி பேசினார்.