1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 21 பிப்ரவரி 2017 (16:34 IST)

பெங்களூர் சிறை இல்லை திகார் சிறை - சசிகலாவை கட்டம் கட்டும் அமைப்புகள்

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலாவை, சென்னை சிறைக்கு மாற்றுவதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.


 

 
கடந்த 15ம் தேதி முதல் சசிகலா, இளவரசி, தினகரன் ஆகியோர் பெங்களூர் பரப்பன அக்ராஹர சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அவர்களை பாதுகாப்பு கருதி, அங்கிருந்து சென்னை சிறைக்கு மாற்றும் முயற்சியில் அதிமுகவின் துணை பொதுச்செயலாளரும், சசிகலாவின் உறவினருமான  டி.டி.வி.தினகரன் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது. இது தொடர்பாக கர்நாடக உள்துறை அமைச்சகத்தைச் சேர்ந்தவர்களை சசிகலா தரப்பு சந்தித்துப் பேசிவருகின்றனர்.
 
இந்நிலையில் இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுகுறித்து ஊழல் எதிர்ப்பு அமைப்பை சேர்ந்தவர்கள், கர்நாடக உள்துறைக்கு புகார் மனுக்களை அனுப்பியுள்ளனர். அதில் “ ஊழல் வழக்கில் சிக்கி தண்டனை பெற்ற ஒரு குற்றவாளிக்கு உள்துறை அமைச்சகம் எந்த சலுகையும் வழங்கக்கூடாது. பரப்பன அக்ராஹர சிறை சசிகலாவிற்கு பாதுகாப்பாக இல்லை என கோரிக்கை வைக்கப்பட்டால், அதிக பட்ச பாதுகாப்பு நிறைந்த திகார் சிறைக்கு அவரை மாற்றுங்கள். சென்னை சிறைக்கு மாற்ற அனுமதிக்காதீர்கள். இதற்கு கர்நாடக அரசு துணை போகக் கூடாது” என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 
 
மறுபுறம், சசிகலாவை சென்னை புழல் சிறைக்கு மாற்றும் முயற்சிகள் நடைபெற்றால், கர்நாடகாவில் வசிக்கும் தமிழர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட முடிவெடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
 
அதேபோல், இதே கோரிக்கை முன் வைத்து ஆம் ஆம்தி கட்சி சார்பிலும், பெங்களூர் சிறை அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்றக் கோரி மனு நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்டால், பெங்களூர் சிறை டிஜிபி ஒப்புதலை நீதிபதி கேட்பார். அப்போது, சசிகலாவிற்கு தேவையான வசதிகள் இங்கேயே செய்து தரப்படும் என நீங்கள் தெரிவியுங்கள். ஒருவேளை பாதுகாப்பு காரணம் காட்டி முறையிட்டால், அதிக பாதுகாப்புள்ள திகார் சிறைக்கு சசிகலாவை மாற்றுங்கள்” என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இப்படி எல்லா தரப்பிலிருந்தும் சசிகலாவிற்கு எதிர்ப்பு கிளம்பியிருந்தாலும், அவரை எப்படியாவது சென்னை புழல் சிறைக்கு மாற்றும் முயற்சியில் டி.டிவி.தினகரன் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் எனத் தெரிய வந்துள்ளது.