1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : சனி, 31 ஜனவரி 2015 (16:09 IST)

’நான் பாஜகவில் தொண்டராக இணைய விரும்புகிறேன்’ - நடிகை ஜெயபிரதா

நான் பாஜகவில் ஒரு தொண்டராக இணைய விரும்புகிறேன் என்று நடிகையும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நடிகை ஜெயப்பிரதா கூறியுள்ளார்.
 
தன்னுடைய 14 வயதில் தனது திரைப்பயணத்தைத் தொடங்கியவர் நடிகை ஜெயபிரதா. ஆந்திராவை சேர்ந்த நடிகை ஜெயபிரதா, தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் 70க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார். தமிழில் சலங்கை ஒலி, மன்மத லீலை, நினைத்தாலே இனிக்கும், ஏழைஜாதி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
 

 
நடிகை ஜெயபிரதா, 1994 ஆம் ஆண்டில் என்.டி.ராமாராவ் அவர்களுடைய தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார். பின்னர் அவரிடமிருந்து ஜெயபிரதா பிரிந்து சென்று, கட்சியின் சந்திரபாபு நாயுடு பிரிவில் சேர்ந்தார். 1996 ஆம் ஆண்டில் ராஜ்ய சபாவுக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
சந்திரபாபு நாயுடுவுடனான கருத்து வேற்றுமையால், அவர் தெலுங்கு தேசக் கட்சியை விட்டு வெளியேறி சமாஜ்வாடி கட்சியில் சேர்ந்தார். அதன் பின்னர் கடந்த 2004 பொதுத் தேர்தலின்போது உத்திரப் பிரதேசத்தின் ராம்பூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார்.
 

 
2009 ஆம் ஆண்டில் மூத்த சமாஜ்வாடி கட்சித் தலைவர் ஆசம் கான், தன்னுடைய நிர்வாணப் படங்களை விநியோகிப்பதாக ஜெயபிரதா குற்றஞ்சாட்டினார். 30,000 க்கும் கூடுதலான வாக்குகளுடன் அவர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
 
மேலும் அடுத்தப் பக்கம்...

தற்போது பாஜகவில் இணையப்போவதாக தகவல்கள் வெளியாகி வந்தது. இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய ஜெயபிரதா, “நான் பா.ஜனதா கட்சியில் ஒரு தொண்டராக இணைய விரும்புகிறேன். இது தொடர்பாக கட்சியின் அனைத்து மூத்த தலைவர்களுடனும் பேச்சு நடந்து வருகிறது.
 

 
அது எனது மட்டத்தில் அல்ல. மாறாக மேல்மட்ட அளவில். எனது வழிகாட்டியான அமர்சிங், இது குறித்து அவர்களுடன் பேச்சு நடத்தி வருகிறார். பா.ஜனதாவில் எந்த பதவியோ, தேர்தலில் போட்டியிட வாய்ப்போ கேட்கவில்லை. கட்சியில் இணைந்து சேவை செய்யவே விரும்புகிறேன். எந்த தேர்தலிலும் போட்டியிடுவதற்காக அல்ல.
 
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்த்து பா.ஜனதா சார்பில் போட்டியிடுவதாக வெளியான தகவல்கள் அனைத்தும் ஊடகங்களால் வெளியிடப்பட்டவை. நான் ஒருபோதும் அவ்வாறு கூறவில்லை.
 
இந்தியாவை முன்னெடுத்து செல்வதிலும், அதற்காக மற்றவர்களை ஊக்குவிப்பதிலும் நரேந்திர மோடியின் தலைமைத்துவம் என்னை கவர்ந்து விட்டது. எனவே மோடியின் தலைமையின் கீழ் பணியாற்ற விரும்புகிறேன். அந்தவகையில் ஆரோக்கியமான அரசியலையே நான் விரும்புகிறேன். வேறெதையும் அல்ல” என்று கூறியுள்ளார்.