1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By Veeramani
Last Modified: செவ்வாய், 6 மே 2014 (13:16 IST)

தேநீர் விற்றேன்! ஆனால் தேசத்தை விற்றதில்லை - நரேந்திர மோடி

உத்தர பிரதேச மாநிலம் தோமாரியாகஞ்சில் தேர்தல் பிரச்சாரம் செய்த பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பேசுகையில், நான் தேநீர் விற்றேனே தவிர, ஒரு போதும் தேசத்தை விற்றதில்லை என்று கூறினார்.
 
பிரச்சாரத்திற்கு முன்னதாக தனது ட்விட்டர் வலை பக்கத்தில் பிரியங்கா காந்திக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சில கருத்துகளையும் அவர் பதிவு செய்திருந்தார். அதில், கடைநிலை அரசியலே இந்திய தேசத்தை தவறான ஆட்சியிலிருந்து காப்பாற்றும் என அவர் தெரிவித்திருந்தார்.
 
சமீபத்தில் அமேதி தொகுதியில் தனது சகோதரர் ராகுல் காந்தியை ஆதரித்து பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய பிரியங்கா காந்தி, தனது தந்தையின் உயிர் தியாகத்தைக் கூட சில கட்சிகள் கீழ்த்தரமாக அரசியலாக்குவதாக பேசியிருந்தார்.
 
இதற்கு பதிலளிக்கும் வகையில் மோடி தனது ட்விட்டர் வலை பக்கத்தில், "நான் சமுதாயத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவன். எனவே என் அரசியலும் கடைநிலை மக்களுக்கானதாகவே இருக்கும். இத்தகைய கடைநிலை அரசியல்தான், 60 ஆண்டுகளாக நடைபெறும் தவறான ஆட்சியின் பிடியிலிருந்து இந்திய தேசத்தை மீட்கும். இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லும். பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இந்த தேசத்தின் வளர்ச்சிக்கு ஆற்றியுள்ள தொண்டு பலருக்கு புரிவதில்லை" என பதிவு செய்துள்ளார்.