வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 27 மே 2015 (15:48 IST)

நான் மாட்டிறைச்சி சாப்பிடுவதை யார் தடுப்பது? - நக்விக்கு மத்திய அமைச்சர் பதிலடி

நான் மாட்டிறைச்சி சாப்பிடுவேன். அதை யார் தடுக்க முடியும் என்று மாநிலங்களுக்கான உள் விவகாரத் துறை அமைச்சர் கிரேன் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
 
கடந்த சில தினங்களுக்கு மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி ’மாட்டு இறைச்சி இல்லாமல் வாழ முடியாதவர்கள் பாகிஸ்தான் செல்லலாம்’ என்ற கருத்து தெரிவித்திருந்தார். இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
 
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியும், இந்திய பிரஸ் கவுன்சிலின் தலைவருமான மார்கண்டேய கட்ஜு, "உலகத்தில் 90% பேர் மாட்டு இறைச்சி சாப்பிடுகின்றனர். அவர்கள் எல்லோரும் பாவம் செய்தவர்களா? மாடு புனிதமானதாகவோ, நமது தாயகவோ இருக்க முடியும் என்பதை நான் மறுக்கிறேன்.
 
ஒரு விலங்கு எப்படி மனிதர்களுக்கு தாயாக இருக்க முடியும்? இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால், மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி உட்பட, 90 சதவீத இந்தியர்கள் முட்டாள்கள்தான்” என்று கூறியிருந்தார்.
 
இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்து பாஜகவைச் சேர்ந்தரும், மாநிலங்களுக்கான உள் விவகாரத் துறை அமைச்சருமான கிரேன் ரிஜிஜு, “அருணாச்சலப் பிரதேசத்தை சேர்ந்தவனான நான் மாட்டுக்கறி உண்பவன். என்னை எவராலும் தடுக்க முடியுமா?
 
ஆகையால், நாம் எவருடைய உணர்ச்சிப்பூர்வமான நடைமுறையையும் தடுக்க வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், “இது ஒரு ஜனநாயக நாடு. ஆனால், சில நேரங்களில், சில அறிக்கைகள் இனியவையாக இல்லாமல் போய்விடுகின்றன” என்றார்.