வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: செவ்வாய், 28 ஏப்ரல் 2015 (16:50 IST)

ஆந்திரா என்கவுண்ட்டர்: போலீஸ் விசாரணை குறித்து உயர் நீதிமன்றம் அதிருப்தி

ஆந்திர வனப்பகுதியில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பான  வழக்கில்  ஆந்திர போலீஸ் விசாரணை திருப்தி அளிக்கவில்லை என்று ஹைதராபாத் உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
 

 
திருப்பதி, சேஷாச்சலம் வனப்பகுதியில் செம்மரக்கட்டை வெட்டி கடத்தியதாக 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இது பற்றி சிபிஐ விசாரிக்க உத்தரவிடக்கோரி சிவில் உரிமைக் கழகமும், கொல்லப்பட்ட சசிகுமாரின் மனைவி முனியம்மாள் ஆகியோர் ஆந்திர உயர் நீதிமன்றத்தில்  வழக்குத்  தொடர்ந்துள்ளனர்.
 
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணை தொடர்பான போலீசாரின் டைரி நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதை படித்து பார்த்த நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
 
10 நாட்களுக்கு முன்பு சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்ட பின்பும் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லாதது அதிருப்தி அளிக்கிறது என்று நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
 
தற்போது நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு விசாரணைக் குழு தலைவர் மீது ஏற்கனவே பல போலி என்கவுண்ட்டர்  புகார்கள் இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதைக் கவனத்தில் கொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை இன்னும் 60 நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
 
இதில் போலீஸ் விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் என்றும், சிறப்பு அரசு வழக்கறிஞரை  நியமிக்கக் கூடிய நிலையை ஏற்படுத்த வேண்டாம் என்றும் நீதிமன்றம் எச்சரித்தது. அடுத்த வழக்கு விசாரணையை வருகிற மே 1ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்தது.