1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : திங்கள், 18 ஆகஸ்ட் 2014 (12:16 IST)

ஹிட்லரை விட மோசமாகச் செயல்படுவேன்: சந்திரசேகர ராவ் பேச்சு

சட்டவிரோதமான செயல்களைத் தடுக்க, தேவைப்பட்டால் ஹிட்லரை விட மோசமாக நடப்பேன் என்று தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலத்தை பிரித்து தனி தெலங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டது.

நாடாளுமன்ற தேர்தலோடு சேர்த்து 2 மாநிலங்களுக்கும் நடத்தப்பட்ட தேர்தலில் ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவும், தெலுங்கானாவில் சந்திரசேகரராவும் வெற்றி பெற்று முதலமைச்சர்களாகப் பதவி ஏற்றுக்கொண்டனர்.

இந்நிலையில் சுதந்திரதினத்தையொட்டி ஆந்திரா மற்றும் தெலங்கானா ஆளுநர் இ.எஸ்.எல்.நரசிம்மன் 2 முதலமைச்சர்களுக்கும் தேநீர் விருந்து அளித்தார்.

இதில் சந்திரபாபுநாயுடுவும், சந்திரசேகரராவும் கலந்து கொண்டனர். அப்போது இரு மாநில பிரச்சினைகள் குறித்து பேசுவதற்காக இருவரும் கலந்து ஆலோசிக்க வேண்டுமென ஆளுநர் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து சந்திரபாபுநாயுடுவும், சந்திரசேகரராவும் ஆளுநர் முன்னிலையில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் இருமாநில தலைமைச் செயலாளர்கள், உயர் அதிகாரிகள், சபாநாயகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த சந்திர சேகர் ராவ், இருவருக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்ததாகக் கூறினார்.

ஆந்திர மாநிலத்தில் உள்ள 4500 அரசு ஊழியர்களை பிரித்துக்கொள்வது பற்றி விவாதித்ததாக கூறிய அவர், ஆந்திர சட்டமன்ற கூட்டம் செப்டம்பர் முதல் வாரத்தில் முடிவடைந்தவுடன் தெலங்கானா சட்டமன்றம் கூட்டப்படும் என ஒப்புக்கொள்ளப்பட்டதாகவும் கூறினார்.

அடுத்த 10 ஆண்டுகளுக்கு இரு மாநிலங்களுக்கும் பொதுவான தலைநகராக ஐதராபாத் இருப்பதற்கு இரு தரப்பும் ஒப்புக்கொண்டன.

அதே சமயம் ஹிட்லர் என என்னை அழைப்பது பற்றி கவலையில்லை என்று கூறினார். சட்டவிரோதமாக நடக்கும்போது அதை தடுக்க, தேவைப்பட்டால் ஹிட்லரை விட மோசமாக நடப்பேன் என்று தெரிவித்தார்.