வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Modified: செவ்வாய், 19 ஆகஸ்ட் 2014 (09:35 IST)

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் இன்னொரு ஹிட்லர்: திக்விஜய் சிங் கருத்து

இந்துத்துவா கொள்கையைத் தொடர்ந்து வலியுறுத்திவரும் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் இன்னொரு ஹிட்லர் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கூறியுள்ளார்.

இந்தியர்களின் கலாசார அடையாளம் இந்துத்துவா என ஒடிசாவில் கடந்த வாரம் நடந்த நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறினார்.

இதற்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில் மும்பையில் நடந்த வி.எச்.பி அமைப்பின் 50 ஆம் ஆண்டு விழா கொண்டாட்ட நிகழ்ச்சியில் பேசிய மோகன் பகவத், இந்துஸ்தான் இந்து நாடு.

நமது நாட்டின் அடையாளம் இந்துத்துவா. இது மற்ற மதங்களை உள்ளடக்கியது என்றார்.

இந்தக் கருத்துக்கு டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கூறியதாவது:-

“ஒரு ஹிட்லர்தான் இருந்தார் என நினைத்தேன். இப்போது, இன்னொரு ஹிட்லர் இருப்பது போல் தெரிகிறது. கடவுள்தான் இந்தியாவை காப்பாற்ற வேண்டும்.

மற்ற மதங்களின் மீது நம்பிக்கை வைத்திருப்போரும் இந்துவா? என்பதை மோகன் பகவத் விளக்க வேண்டும். இந்து அல்லது இந்துத்துவா என்ற வார்த்தை எந்த வேதங்களிலும் இடம்பெறவில்லை.

அரசியலில் மதத்தை பயன்படுத்தி அப்பாவி மக்களை முட்டாளாக்குவதை சங்க் அமைப்பு நிறுத்த வேண்டும்.“ இவ்வாறு திக்விஜய் கூறியுள்ளார்.