1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : புதன், 27 ஆகஸ்ட் 2014 (08:32 IST)

ஹெலிகாப்டர் ஒப்பந்த பேர ஊழல்: டெண்டர்களில் பங்கேற்க இத்தாலி நிறுவனத்துக்குத் தடை

ஹெலிகாப்டர் ஒப்பந்த பேர ஊழலில் சிக்கிய இத்தாலி நாட்டின் ஃபின்மெக்கானிக்கா நிறுவனத்துக்கு, இந்தியாவில் விடப்படும் டெண்டர்களில் பங்கேற்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஃபின்மெக்கானிக்கா நிறுவனத்துடனும், அதன் துணை நிறுவனங்களுடனும் எத்தகைய நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்பது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டது.

அதில், ஃபின்மெக்கானிக்கா நிறுவனம், இந்தியாவால் எதிர்காலத்தில் விடப்படும் டெண்டர்களில் பங்கேற்பதற்குத் தடை விதிக்கப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஃபின்மெக்கானிக்காவுடனும், அதன் துணை நிறுவனங்களுடனும் ஏற்கெனவே செய்து கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் நீடிக்கின்றன என்றும், அதேநேரத்தில் அதிநவீன ஹெலிகாப்டர் வாங்குவது தொடர்பாக அகஸ்டாவெஸ்ட் லேண்ட் நிறுவனத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்துக்கு இந்த நீட்டிப்பு உத்தரவு பொருந்தாது எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

ஃபின்மெக்கானிக்காவின் துணை நிறுவனமான அகஸ்டாவெஸ்ட் லேண்ட்டிடம் இருந்து ரூ.3,600 கோடி மதிப்பிலான அதிநவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு இந்தியா ஒப்பந்தம் செய்தது.

இந்த ஒப்பந்தத்தைப் பெறுவதற்கு இந்தியாவைச் சேர்ந்த சிலருக்கு அந்த நிறுவனம், பல கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது குறித்து இந்திய விமானப்படை முன்னாள் தலைமைத் தளபதி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

மேலும், ஃபின்மெக்கானிக்காவுடனும், அதன் துணை நிறுவனங்களுடனும் செய்து கொள்ளப்பட்ட ரூ.30,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களை பாதுகாப்பு அமைச்சகம் நிறுத்தி வைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.