உத்தரகாண்டில் கனமழை : 9 பேர் பலி
உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்த கனமழையில் இதுவைரை 9 பேருக்கும் மேல் பலியாகியுள்ளனர் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.
உத்தரகாண்டில் நேற்று மழை பெய்ய தொடங்கியது. 2வது நாளாக இன்றும் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட நிலச்சரிவில் 3 பேரும், சாலை விபத்தில் 6 பேரும் சிக்கி மொத்தம் 9 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
அங்கு ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் கங்கை நதி அருகே யாரும் செல்ல வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது. இடைவிடாது பெய்து வரும் கனமழையால் பத்ரிநாத் யாத்திரை செல்லும் சாலையில் பாறைகள் சரிந்து உள்ளது.
அங்கே பெய்து வரும் கன மழையால் பத்ரிநாத், கங்கோத்ரி செல்லும் சாலைகளில் நிலச்சரிவு ஏற்பட்டு பாதைகள் மூடப்பட்டுள்ளன. ரிஷிகேஷ் - பத்ரிநாத் சாலையும் நிலச்சரிவு காரணமாக மூடப்பட்டுள்ளது.
நிலச்சரிவால் ஏற்பட்ட இடிபாடுகளை அகற்றும் பணியில், மீட்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், உத்தரகாண்டில் இன்னும் 2 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.