வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: சனி, 30 மே 2015 (18:21 IST)

ஆன்லைனில் மத்திய அரசே மருந்து விற்பனை செய்ய புதிய திட்டம்!

ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்கும் பழக்கம் அதிகரித்து வரும் நிலையில், மருந்துகளையும் ஆன்லைன் மூலமாகவே விற்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

 
கம்ப்யூட்டர் மவுஸின் ஒரு க்ளிக்கிலேயே ஷாப்பிங் செய்யும் போக்கு இணைய பயன்பாட்டாளர்களிடையே அதிகரித்து வருகிறது. இதுபோன்ற ஆன்லைன் ஷாப்பிங் விரும்பிகளுக்காவே ப்ளிப்கார்ட், அமேசான், ஸ்னேப்டீல் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் களத்தில் இறங்கியுள்ளன.
 
இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமும் தற்போது ஆன்லைன் மூலம் மருந்துகளை விற்பது தொடர்பாக ஆலோசித்து வருவதாகவும், இதற்கான திட்டத்தை தயாரிக்கும் பணியில் சுகாதாரத் துறை அமைச்சக பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
இந்நிலையில் இதுபோன்ற மருந்து விற்பனை செயல்பாடுகள் மற்றும் நெறிமுறைகளை மருந்து தர ஒழுங்குமுறை ஆணையம் வகுத்து வருகிறது.
 
இதனிடையே அடுத்த மாதம் நடைபெற உள்ள மருந்து ஆலோசனை கமிட்டியின் ஆலோசனை கூட்டத்தில் இந்த திட்டம் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
 
தற்போதைய நிலையில் 'H' medicine எனப்படும் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் மருந்துகளை மருத்துவர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் விற்பதை மருந்துகள் மற்றும் அழகுசாதன பொருட்கள் சட்டப்பிரிவு அனுமதிக்கவில்லை. ஆனாலும் ஆன்லைன் மூலமாக ஆங்காங்கே மருந்துகள் சில்லறை விற்பனை நடந்துகொண்டுதான் உள்ளது என மத்திய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்திற்கு புகார்கள் வந்து கொண்டுதான் உள்ளன.
 
அதே சமயம் இது தொடர்பாக நெறிமுறைகள் ஏதும் வகுக்கப்படாததால், ஒழுங்குமுறை ஏஜென்சிகளால் இதுபோன்ற மருந்து விற்பனைகளை கண்காணித்து நடவடிக்கை எடுப்பது மிகக்கடினமான ஒன்றாக உள்ளது.
 
இந்நிலையில் "மாறிவரும் காலச்சூழலுக்கு ஏற்ப ஆன் லைனில் மருந்து விற்பதற்கான சட்டப்பிரிவுகளை கொண்டு வருவது மற்றும் மருந்து விற்பனையை கண்காணிப்பதற்கான செயல்முறையை உருவாக்குவது அவசியம் என நாங்கள் கருதுகிறோம்" என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.
 
இந்நிலையில் இது தொடர்பான ஆலோசனைகளை தெரிவிக்குமாறு மாநில மருந்து ஒழுங்குமுறை ஏஜென்சிகளை த ரக்ஸ் கண்ட்ரோலர் ஜெனரல் ஆப் இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது.