1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 12 பிப்ரவரி 2016 (15:04 IST)

போலி என்கவுண்ட்டரில் கொல்லப்பட்ட இஷ்ரத் ஜஹான் லஷ்கர்-இ- தொய்பா பயங்கரவாதியா?

போலி என்கவுண்ட்டரில் கொல்லப்பட்ட இஷ்ரத் ஜஹான் லஷ்கர்-இ- தொய்பா பயங்கரவாதியா?

நரேந்திரமோடி முதல்வராக இருந்தபோது, குஜராத்தில் போலி என்கவுண்ட்டரில் கொல்லப்பட்ட இஷ்ரத் ஜஹான் ஷ்கர்-இ- தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதி என்று நிறுவும் வகையில், புதிய வாக்குமூலம் ஒன்று டேவிட் ஹெட்லியிடம் பெறப்பட்டு உள்ளது.
 

 
மும்பை தாக்குதல் வழக்கு தொடர்பாக, லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதியான டேவிட் ஹெட்லி, கடந்த 3 நாட்களாக அமெரிக்கச் சிறையில் இருந்தபடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் வாக்குமூலம் அளித்து வருகிறார். மும்பை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி.ஏ. சனாப் முன்னிலையில் இந்த வாக்குமூலம் பெறப்பட்டு வருகிறது.
 
இதுவரையிலான வாக்குமூலத்தில், மும்பை குண்டுவெடிப்பில் தனக்கு உள்ள தொடர்பை ஒப்புக் கொண்ட அவர், தாக்குதலுக்கு முன்னர் உளவு பார்ப்பதற்காக 7 முறை பல்வேறு பெயர்களில் இந்தியா வந்து சென்றதாகவும், இந்தியாவில் நடந்த தீவிரவாத தாக்குதல்களுக்கு லஷ்கர் -இ-தொய்பா அமைப்புதான் முழு காரணம்; அனைத்து உத்தரவுகளுமே அதன் தலைவர் ஸகியுர் ரஹ்மான் லக்வியிடம் இருந்தது தான் வந்தன என்றும் தெரிவித்தார்.
 
மேலும், லஷ்கர் இ-தொய்பா அமைப்பு, பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐஎஸ்ஐயின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் கூறினார்.
 
இந்நிலையில், வியாழனன்றும் ஹெட்லியிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலம், வாக்குமூலம் பெறப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது:தான் மும்பைக்கு செல்லும் முன்பு ஐஎஸ்ஐயைச் சேர்ந்த மேஜர் இக்பால் எனக்கு ரூ. 17 லட்சம் அளித்தார். அந்த பணம் உளவு பார்ப்பதற்காக அளிக்கப்பட்டது.
 
எனக்கு மேஜர் இக்பால் இந்திய ரூபாயின் கள்ளநோட்டுகளை அளித்தார். மேஜர் அப்துல் ரஹ்மான் பாஷாவும் எனக்கு ரூ.18 ஆயிரம் அளித்தார். 1.11.2006 அன்று மும்பை அலுவலகத்திற்கான ஒப்பந்தம் போரா என்பவருடன் கையெழுத்தானது.
 
மும்பையில் உள்ள ரிலையன்ஸ் வெப்வேர்ல்டுக்கு நான் 2007ம் ஆண்டில் செப்டம்பர் 12, 18 ஆகிய தேதிகள் மற்றும் அக்டோபரில் 30ம் தேதி என மூன்று முறை சென்று இன்டர்நெட்டை பயன்படுத்தியுள்ளேன். அங்குள்ள பதிவேட்டில் நீங்கள் என் கையெழுத்தை பார்க்கலாம்.
 
பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு பழி வாங்க குஜராத்தில் உள்ள அக்ஷர்தம் கோவிலை தாக்க முஜம்மில் பட் திட்டமிட்டார். மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டது" என்று கூறியுள்ளார்.
 
அத்துடன் 3-வது நாள் வாக்குமூலத்தில், இந்தியாவில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் பெண்கள் பிரிவு செயல்பட்டு வந்தது என்றும் அந்த பிரிவிற்கு அபு மசார் தலைமை தாங்கி வந்தார் என்றும் தெரிவித்த ஹெட்லி, மும்பை தாக்குதல் சம்பவத்தில் கூட, பெண் ஒருவருக்கும் தொடர்பு உள்ளதாக கூறியுள்ளார்.
 
ஆனால், அந்தப் பெண் யாரென்று தமக்கு தெரியாது என்றும் கூறியுள்ளார். அப்போது, போலீஸ் தரப்பில் 3 பேரின் பெயர்களைக் கொடுத்து, அவர்களில் ஒருவரைக் குறிப்பிடுமாறு கேட்டதாகவும், அப்போது தோராயமாக இஷ்ரத் ஜஹான் பெயரை ஹெட்லி கூறியதாகவும் தெரிகிறது.
 
இதையடுத்து, போலி என்கவுண்ட்டரில் கொல்லப்பட்ட இஷ்ரத் ஜஹான் லஷ்கர்-இ- தொய்பாவைச் சேர்ந்த பயங்கரவாதி என்றும் காட்டும் வேலையில் மும்பை போலீசார் இறங்கியுள்ளனர். இது, மோடியையும், அமித்ஷாவையும் போலி என்கவுண்டர் குற்றச்சாட்டில் இருந்து தப்பவிடும் முயற்சி என்று குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளது.