வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: திங்கள், 27 ஜூலை 2015 (20:47 IST)

பஞ்சாப் தாக்குதல் முடிவுக்கு வந்தது: தீவிரவாதிகள் அனைவரும் சுட்டுக்கொலை

பஞ்சாப் மாநிலத்தில் பெண் உள்ளிட்ட தீவிரவாதிகள் காவல் நிலையத்தில் புகுந்து தாக்குதல் நடத்தியதில் காவல் கண்காணிப்பாளர், 3 போலீஸ்காரர் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். 11 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த துப்பாக்கிச் சண்டை முடிவுக்கு வந்தது.
 

 
பாகிஸ்தான் எல்லை அருகில் உள்ள குர்தாஸ்பூரில் அதிகாலையில் ராணுவ உடையில் நுழைந்த 4 தீவிரவாதிகள் சாலையோர உணவகம் ஒன்றின் உரிமையாளரை சுட்டுக் கொன்றனர். பின்னர் அங்கிருந்த காரை கடத்திக் கொண்டு ஊருக்குள் நுழைந்த அவர்கள் அரசுப் பேருந்தின் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 4 பயணிகள் படுகாயம் அடைந்தனர். பின்னர் தினாநகர் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் காவலர் குடியிருப்புகள் மீது கையெறி குண்டுகள் வீசி தாக்குதல் நடத்திய திவிரவாதிகள் காவல் நிலையத்திற்குள் நுழைந்து சராமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.
 
போலீசாரும் பதிலடி கொடுத்ததால் இரு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை வெடித்தது. தகவல் அறிந்து பஞ்சாப் காவல்துறையின் அதிரடிப்படையினர் காவல்நிலையத்தை சுற்றி வளைத்து தாக்குதலில் ஈடுபட்டனர். 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்ட நிலையில் எஞ்சியவர்கள் அருகில் உள்ள கட்டிடம் ஒன்றில் புகுந்து கொண்டு போலீசாருடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். இதையடுத்து எல்லை பாதுகாப்பு படை மற்றும் ராணுவ வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். இருப்பினும் ஏராளமான ஆயுதங்களை வைத்துக்கொண்டு தீவிரவாதிகள் திடீர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்துவதால் 11 மணி நேரத்திற்கும் மேலாக சண்டை நீடித்து வந்தது.
 
இதனையடுத்து மற்ற 2 தீவிரவாதிகளும் சுடடுக்கொல்லப்பட்டனர். துப்பாக்கிச் சண்டையில் காவல் புலனாய்வு பிரிவு கண்காணிப்பாளர் பல்ஜித் சிங், 3 காவலர்கள் உயிரிழந்தனர். மேலும் பொதுமக்களில் 2 பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால் ஜம்மு-காஷ்மீரில் தேசிய பாதுகாப்பு வீரர்களும் வரவழைக்கப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்திய தீவரவாதிகளில் பெண் ஒருவர் என்பது தெரிய வந்துள்ளது. பாகிஸ்தானில் இருந்து பஞ்சாப் மாநிலத்திற்குள் அவர்கள் ஊடுருவியதாகவும் கூறப்படுகிறது.
 
இதனிடையே குர்தாஸ்பூர் அருகே உள்ள ரயில் தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த 5 வெடிகுண்டுகளை ரயில்வே பாதுகாப்பு படையினர் கைப்பற்றியுள்ளனர். குண்டு வைக்கப்பட்ட இருப்புபாதை வழியாக பயணிகள் ரயில் சென்ற போது வெடிகுண்டுகளின் ஒயர்கள் சரியாக இணைக்கபடாததால் பெரும் சதி வேலை முறியடிக்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். கார்கில் போர் வெற்றியின் 16-வது ஆண்டு விழா கொண்டாடங்கள் முடிந்த மறுநாளே இந்திய - பாகிஸ்தான் எல்லை அருகே தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியிருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.