வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Modified: சனி, 4 ஜூலை 2015 (06:16 IST)

திருமண சர்ச்சை: பிரதமர் நரேந்திர மோடி மீது தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி

பிரதமர் நரேந்திர மோடி மீது திருமண சர்ச்சை குறித்து தொடரப்பட்ட வழக்கை அகமதாபாத் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
 
குஜராத் முதலமைச்சராக நரேந்திர மோடி இருந்த போது, கடந்த 2012ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் சட்டப் பேரவைத் தேர்தல் வேட்பு மனுவில் தனது திருமண விவரத்தைக் குறிப்பிடவில்லை. ஆனால், வதோதரா மக்களவைத் தேர்தல் வேட்பு மனுவில் தனது மனைவி பெயர் யசோதா பென் எனக் குறிப்பிட்டார்.
 
இதனால், தான் திருமணமானவர் என்ற உண்மையை கடந்த தேர்தல்களில் மறைத்தார் என்று கூறி, நரேந்திர மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த நிஷாந்த் வர்மா என்பவர் அகமதாபாத் நகரில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
 
இந்த மனு விசாரணைக்கு வந்த போது, மனுதாரரின் புகாரில் உண்மை உள்ளது என்றாலும், இச்சம்பவம் நடைபெற்று ஒரு ஆண்டுகள் ஆன பின்பு, தாமதமாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என கூறி அந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
 
இதை எதிர்த்து, நிஷாந்த் வர்மா,  குஜராத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அங்கு இந்த வழக்கு உயர் நீதிமன்ற (பொறுப்பு) தலைமை நீதிபதி வி.எம்.சஹாய் முன்னிலையில், விசாரணைக்கு வந்த போது, இந்த வழக்கு மிகவும்  தாமதமாக தொடர்ந்த காரணம் குறித்து மனுதாரர் குறிப்பிட தவறி விட்டார். எனவே, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என தள்ளுபடி செய்தார்.
 
பிரதமர் நரேந்திர மோடி மீது தொடரப்பட்ட வழக்குகள், நீதிமன்றத்தில் தொர்ந்து தள்ளுபடியாகி வருவதால் மோடி ஆதரவாளர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.