1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : ஞாயிறு, 29 நவம்பர் 2015 (07:50 IST)

ஜிஎஸ்டி மசோதா விவகாரம்: காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் ராகுல் காந்தி ஆலோசனை

சரக்கு, சேவை வரி மசோதாவை ஆதரிப்பது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுடன் அக்கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தினார்.


 

 
ஜிஎஸ்டி என்னும் சரக்கு, சேவை வரி மசோதாவை நிறைவேற்றுவதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகின்றது.
 
இந்த மசோதா, மக்களவையில் நிறைவேறப்பட்ட நிலையில், மேல்சபையில் ஆளுங்கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லாததால், இந்த மசோதா நிறைவேற்றப்படாமல் உள்ளது.
 
இதைத் தொடர்ந்து, இந்த மசோதாவை நிறைவேற்றும் முயற்சியாக, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கையும் அழைத்து பேசினார்.
 
பின்னர் அவர்கள் கூறிய கருத்துக்கள் பரிசீலிக்கப்படும் என்று உறுதியளித்தார். அப்போது, சோனியா காந்தியும், மன்மோகன் சிங்கும் இது குறித்து தங்கள் கட்சியினருடன் விவாதித்தப் பின்னர் முடிவெடிக்கப்படும் என்று கூறினர்.
 
இந்நிலையில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, தனது இல்லத்திற்கு கட்சியின் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜுன கார்கே, அஜய் மக்கான், சச்சின் பைலட் ஆகியோரை அழைத்து இந்த மசோதாவை ஆதரிப்பது தொடர்ப்ன வழிமுறைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
 
ஜிஎஸ்டி வரி விதிப்பு அளவு 18 சதவீதம் இருக்க வேண்டும் என்றும் அதற்கு அதிகமாக இருக்கக் கூடாது என்றும் மாநில அரசுகள் கூடுதல் ஒரு சதவீத வரி விதிக்க கூடாது என்றும் காங்கிரஸ் கருதுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.