வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: திங்கள், 25 ஆகஸ்ட் 2014 (11:37 IST)

பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் மீண்டும் தொடர புதிய திட்டம்: ஸ்மிருதி இரானி தகவல்

பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வேலைக்கு சென்றவர்கள் தங்களது கல்வியை தொடர புதிய திட்டம் வகுக்கப்பட்டு இருப்பதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.
 
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி மும்பையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
 
பெண்கள், பழங்குடியின குழந்தைகள், தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்தவர்கள் ஆகியோர் பொருளாதார பின்னணியை காரணமாக கொண்டு தங்களது கல்வியை தொடர முடியாமல் வேலைக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். நான் கூட பணம் இல்லாத காரணத்தால் தான் எனது கல்வியை பாதியில் நிறுத்திவிட்டேன்.
 
மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தும் வகையில் 'இஷான் விகாஷ்' என்ற திட்டத்தை தொடங்கி இருக்கிறோம். இத்திட்டத்தின்படி, ஆராய்ச்சியாளர்களாகவும், விஞ்ஞானிகளாகவும் வர விரும்பும் மாணவர்களை இந்தியாவின் தலைசிறந்த தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுக்கு அழைத்து சென்று பயிற்சி அளிப்போம்.
 
இதற்காக கோடைகாலத்தில் ஒரு பிரிவும், குளிர்காலத்தில் ஒரு பிரிவும் தொடங்கப்படுகிறது. இதன் மூலம் ஐ.ஐ.டி. மற்றும் ஐ.ஐ.எம். போன்ற தலைசிறந்த கல்விநிறுவனங்களை ஏறத்தாழ 2 ஆயிரத்து 200 மாணவர்கள் பார்வையிட ஏற்பாடு செய்வோம். மேலும், அவர்களுக்கு பிரத்யேக கருத்தரங்கம் நடைபெறும்.
 
8 ஆம் வகுப்பு வரை பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு அதன்பின் படிக்க வசதி இல்லாமல் வேலைக்கு சென்றவர்கள் மீண்டும் படிப்பை தொடரும் வகையில் இந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதிக்குள் ஒரு திட்டத்தை கொண்டுவர முயற்சி எடுத்து வருகிறோம். இத்திட்டம் ஏராளமான பொதுமக்களுக்கு உதவிகரமாக அமையும்.
 
அரசு பள்ளிக்கூடங்களை மத்திய அரசு ஊக்குவிக்கும். குழந்தைகளின் கல்வி தொடர்பாக மத்திய அரசு அடுத்த ஆண்டுக்குள் புதிய திட்டத்தை அமல்படுத்தும். அதன்படி, உங்களது குழந்தை பள்ளிக்கூடத்துக்குள் நுழைந்த பின்னர் அவனது செயல்பாடுகள் குறித்து பெற்றோருக்கு மெசேஜ் (குறுந்தகவல்) அனுப்பப்படும்.
 
மேலும், கொடுக்கப்பட்ட பாடத்தை உங்களது குழந்தை முடித்துவிட்டானா? என்பது குறித்தும் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்படும். இவ்வாறு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.