வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : வியாழன், 30 ஏப்ரல் 2015 (07:57 IST)

அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கினால் 7 ஆண்டு சிறை

அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கினால் 7 ஆண்டு சிறை தண்டனை வழங்கும் வகையில், ஊழல் தடுப்பு சட்டத்தைத் திருத்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

தற்போது அமலில் இருந்து வருகிற 1988 ஆம் ஆண்டு இயற்றிய ஊழல் தடுப்பு சட்டத்தை திருத்துவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த சட்டத்தின்கீழ் அரசுப்பணியில் இருப்பவர்கள் ஊழல் செய்து, அது நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டால் அதற்கு குறைந்த பட்சம் 6 மாதங்களும், அதிகபட்சம் 5 ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது. 

இந்நிலையில், ஊழலில் ஈடுபட்டால் குறைந்த பட்ச தண்டனை இனி 3 ஆண்டுகளாகவும், அதிகபட்ச தண்டனை 7 ஆண்டுகளாகவும் உயர்கிறது. இதற்கான திருத்தம் ஊழல் தடுப்பு சட்டத்தில் செய்யப்படுகிறது. 
 
ஊழலை ஒழிப்பதற்காக இந்த சட்டத்தில் செய்யப்படும் முக்கிய திருத்தங்கள் வருமாறு:- 
 
லஞ்ச வழக்கில், லஞ்சம் கொடுப்பவர், வாங்குபவர் என இரு தரப்பினருக்கும் தண்டனை விதிக்கப்படும். 
 
ஊழல் மூலம் அடைகிற பலன்களை கட்டுப்படுத்தும் வகையில், பறிமுதல் செய்யும் அதிகாரம், மாவட்ட நீதிமன்றத்துக்கு பதிலாக விசாரணை நீதிமன்றத்துக்கு (தனி நீதிமன்றம்) வழங்கப்படும். 2 ஆண்டில் விசாரணை முடியும்.  லஞ்ச ஊழல் வழக்கில் விசாரணையை 2 ஆண்டுகளில் முடிக்க வேண்டும். 
 
வினியோகத்தில் ஊழல் செய்கிறபோது, சட்ட வரம்புக்குள் தனிநபர்கள் கொண்டு வரப்பட்டு வந்த நிலையில், இனி வணிக நிறுவனங்களும் சேர்க்கப்படும். 
 
அரசு ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுப்பதை தடுப்பதற்கு வணிக அமைப்புகளுக்கு வழிமுறைகள் வகுக்கப்படும். அரசு ஊழியர்கள் வேண்டுமென்றே லஞ்சம் வாங்குவது, கிரிமினல் குற்றமாக கருதப்படும். அத்தகைய வழக்குகளைப் பொறுத்தமட்டில் வருவாய்க்கு அதிகமாக குவித்த சொத்துகள் ஆதாரமாக கொள்ளப்படும். 
 
லஞ்சமாக பணம் பெறுவதோடு மட்டுமல்லாமல், பணமற்ற பிற சலுகைகள் பெறுவது "சலுகைகள்" என்ற வரையறையில் கொண்டு வரப்படும். 
 
ஓய்வுபெற்ற, பதவியில் இருந்து விலகிய அரசு ஊழியர்கள் மீது வழக்கு தொடர்வதற்கு முன் அனுமதி பெற வேண்டும். 
 
பொது பதவி வகிக்கிறவர்கள் தாங்கள் பதவியில் இருக்கிற போது சிபாரிசு செய்து அல்லது முடிவு எடுத்து, குற்றம் செய்தால், அது தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு, புலனாய்வு செய்வதற்கு லோக்பால் அல்லது லோக் அயுக்தா அனுமதி பெற வேண்டும். 
 
டெல்லி மேல்-சபையில் நிலுவையில் உள்ள ஊழல் தடுப்பு சட்ட (திருத்தம்) மசோதாவை பின்பற்றி இந்த திருத்தங்களை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.