வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: வியாழன், 21 ஆகஸ்ட் 2014 (18:27 IST)

"நீக்ரோ" என்று கூறியதற்கு மன்னிப்பு கேட்ட கோவா முதல்வர்: அபத்த விளக்கம் கூறி சமாளிப்பு

கோவாவில் கைது செய்யப்பட்ட ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த ஒருவரை அம்மாநில உள்துறை அமைச்சகம் ‘நீக்ரோ’ என்று குறிப்பிட்டது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
 
நீக்ரோ என்ற வார்த்தையை ஒருவரைக் குறிக்கப் பயன்படுத்தியது தவறு என்றும் அதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம் என்று கூறிய கோவா முதல்வர் மனோகர் பரிக்கர் அதன் பிறகு நீக்ரோ என்ற பதத்திற்கு அளித்த விளக்கம் விசித்திரமாக அமைந்துள்ளது.
 
"நீக்ரோ" என்று குறிப்பிட்டது காவல்துறையில் கிளார்க் ஒருவர். இந்த வார்த்தை எவ்வளவு மோசமானது என்பதை அவர்கள் அறியவில்லை. நீக்ரோ என்ற வார்த்தைக்கு இரண்டு அர்த்தங்கள் உள்ளன. கறுப்பரினத்தைச் சேர்ந்த ஒருவரை குறிப்பதாக அது பயன்படுத்தப்படுவது மிகவும் தவறு, அது ஒரு இழிசொல், ஆகவே இந்த வார்த்தை யாரையாவது காயப்படுத்தியிருந்தால் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்” என்றார். ஆனால் அதன் பிறகு இன்னொரு அர்த்தம் என்று அவர் கூறினார்.
 
“பிரேசிலில் உள்ள அமேசான் பகுதியில் ஓடும் நதியின் பெயர் நீக்ரோ. இது அட்லாண்டிக் பெருங்கடலில் கலக்கும் நதி. மிகப்பெரிய நதியின் பெயர் நீக்ரோ. ஆகவே ஒரு நபரைக் குறிப்பதும் இதுவும் ஒன்றல்ல. ஆகவே இதனைத் தன்னிலே பெரிய இழிசொல்லாக எடுத்துக் கொள்ளக்கூடாது” என்கிறார்.
 
கைது செய்தது ஒரு ஆப்பிரிக்க நாட்டுக்காரரை, அவரை நீக்ரோ என்று போலீஸ் பதிவேட்டில் குறித்தாயிற்று. இந்த இடத்தில் அந்த போலீஸ்காரர், நதியின் பெயரையா நினைவில் கொள்வார். வார்த்தைப் பிரயோகத்திற்கு "இடம், பொருள், ஏவல்" என்பது முக்கியக் காரணியாக உள்ளது.
 
ஆப்பிரிக்க நபர் ஒருவரைப் பார்த்து நீக்ரோ என்று கூறிவிட்டு, நான் நதியைத்தான் சொன்னேன் என்று கூறினால் அது எவ்வளவு பெரிய நரித்தனம்?
 
மேலும் ஸ்பானிய மொழியில் ரியோ நீக்ரோ என்று அழைக்கப்படும் அந்த நதியை ஆங்கிலத்தில் கறுப்பு நதி (Black River) என்றே அழைக்கின்றனர். உலகிலேயே மிகப்பெரிய கறுப்பு நீர் நதி என்ற பெயர் பெற்றது அந்த நதி.
 
நதி ஒன்றின் தன்மையைக் குறிக்க நீக்ரோ என்று பெயரிடப்பட்டுள்ளதன் பின்னணியில் நிறவெறி உள்ளதா என்று பார்க்க வேண்டியக் கட்டாயம் உள்ள நிலையில் நீக்ரோ என்று ஒரு நதி இருப்பதனால் அது கறுப்பு என்று ஒரு இனத்தைக் குறிக்கும் இழிசொல்லாகாது என்ற கோவா முதல்வரின் வாதத்தை என்னவென்று வர்ணிப்பது என்று தெரியவில்லை.