செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 31 ஜனவரி 2019 (15:05 IST)

ஜார்ஜ் பெர்னாண்டஸ் மரணம்: ஜெயா ஜெட்லிக்கு பலர் ஆறுதல் தெரிவிப்பது ஏன்?

"நான் ஜெயா ஜெட்லியைப் பற்றி யோசிக்கிறேன். நாம் வாழும் இந்த உலகில் பல அநியாயங்கள் நடக்கின்றன. கடவுள் அவருக்கு தைரியத்தையும், அமைதியையும் தரட்டும்."
"ஜெயா ஜெட்லி தைரியமாக இருக்க வேண்டும். குடும்பத்தினர் ஜார்ஜ் பெர்னாண்டசை விட்டு பிரிந்து சென்றபோதும் அவரை நன்றாக கவனித்துக் கொண்ட ஜெயா, அவரை அவர் அதிகம் நேசித்தார்."
 
நாடு முழுவதும் ரயில்வே துறையை ஒரு வேலை நிறுத்த அறிவிப்பின் மூலம் முடங்கச் செய்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் இன்று உயிருடன் இல்லை. இந்த நேரத்தில் அவருடன் நீண்ட கால தோழியாக இருந்த ஜெயா ஜெட்லியைப் பற்றி நினைத்துப் பார்க்கிறேன்"
 
முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மறைவுக்கு வருத்தம் தெரிவிக்கும் டிவிட்டர் பதிவுகளில் ஜெயா ஜெட்லி பற்றி இப்படியெல்லாம் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜார்ஜ் பெர்ணாண்டஸின் இறுதிச் சடங்குகள் தொடர்பான தகவல்களை சமதா கட்சியின் முன்னாள் தலைவர் ஜெயா ஜெட்லியிடம் பத்திரிகையாளர்கள் கேட்டுக் கொண்டிருந்தனர்.
ஜார்ஜ் பெர்னாண்டசுடனான தனது உறவு நட்பு ரீதியிலானது என்று ஜெயா ஜெட்லி தொடர்ந்து தெரிவித்திருக்கிறார்.
 
அவர், பெர்னாண்டசின் வீட்டில் ஒன்றாக வாழ்ந்தார். அதற்கு லிவ்-இன் உறவு என்றும் பெயர் கொடுக்கப்படுகிறது.
 
ஆனால் பொதுமக்கள், இந்தத் தலைவர்கள் திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்ததால் அவர்களை நிராகரிக்கவில்லை. அதேபோல், இவர்களும் தங்கள் உறவை மறுக்கவும் இல்லை.
ஒருமுறை பிபிசி நேர்காணலில் பேசிய ஜெயா ஜெட்லி, தங்களிடையிலான உறவைப் பற்றி இப்படிக் குறிப்பிட்டார்.
 
"நட்புகளில் பல வகைகள் உள்ளன. சில பெண்களுக்கு ஒருவிதமான அறிவார்ந்த மதிப்பு தேவைப்படுகிறது. நமது ஆணாதிக்க சமூகத்தில் பெண்கள் அறிவு குறைந்தவர்கள், உடலளவில் பலவீனமானவர்கள் என்று நினைக்கிறார்கள். பெண்களும் அரசியல் ரீதியிலான சிந்தனைகளை சிறப்பாக முன்னெடுக்க முடியும் என்ற நம்பிக்கையை எனக்குக் கொடுத்தவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ்."
 
அரசியலில் ஒன்றாக வேலை பார்த்தபோது தொடங்கிய நட்பு, காலம் செல்லச் செல்ல மிகவும் ஆழமானது. ஜெயா ஜெட்லி, தனது கணவர் அஷோக் ஜெட்லியிடம் இருந்து பிரிந்த சமயத்தில், ஜார்ஜ் தனது மனைவி லைலா கபீரிடம் இருந்து பிரிந்திருந்தார். அப்போது 1980களில் ஜார்ஜுடன் சேர்ந்து ஜெயா வசிக்கத் தொடங்கினார்.
 
"அந்த உறவில் ரொமான்ஸ் சுத்தமாக இல்லை" என்று ஜெயா கூறினாலும், அவர்களிடையிலான உறவைப் பற்றி பலரும் வித்தியாசமாக பேசினார்கள். அப்போது, "அரசியல் என்பது மலர்களால் அலங்கரிக்கப்பட்டதில்லை. எனவே, யாரும் மலர் படுக்கை விரிப்பார்கள் என்று காத்துக் கொண்டிருக்காதே என்று சொல்வார் ஜார்ஜ் என்கிறார் ஜெயா ஜெட்லி.
 
தன்னுடன் ஒன்றாக வாழ்வது ஜெயாவுடைய தனிப்பட்ட முடிவு. விமர்சனங்களை புறக்கணிக்க முடியவில்லை என்றால், தன்னை விட்டு விலகிவிடலாம் என்று ஜார்ஜ் தெளிவாக கூறிவிட்டதாக ஜெயா கூறினார்.
ஜார்ஜ் பெர்ணான்டஸ்: ரயில் வேலை நிறுத்தம் மூலம் இந்தியாவை அதிரவைத்தவர், ஈழ ஆதரவாளர்
 
30 ஆண்டுகளுக்கு முன்னர், லிவ்-இன் ரிலேஷன்ஷிப்' என்ற வார்த்தை, இந்திய சமூகத்தில் பரிச்சயமானதோ அல்லது சகஜமான வார்த்தையோ அல்ல. அந்த காலகட்டத்தில் இந்த வார்த்தைக்கு வெளிப்படையான சிந்தனையோ அல்லது சட்ட அங்கீகாரமோ, சமூக அங்கீகாரமோ இருந்ததில்லை.
 
தற்போது திருமணம் செய்யாமல் நீண்ட காலமாக ஒன்றாக வசிக்கும் ஆண் மற்றும் பெண்ணுக்கு, திருமணமானவர்களுக்கு கிடைக்கும் அங்கீகாரத்தை சட்டம் வழங்குகிறது. அவர்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு சட்ட ரீதியிலான அங்கீகாரம் கிடைக்கிறது. மேலும் திருமணம் செய்துக் கொள்ளாமல் ஒரே வீட்டில் சேர்ந்து வசித்தாலும், குடும்ப வன்முறைச் சட்டத்தின் கீழ் புகார் அளிக்க முடியும்.
 
ஆனால், இன்றைய இந்த நிலைமை 30 ஆண்டுகளுக்கு முன் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒன்று. பாதுகாப்பு அமைச்சர் என்ற நாட்டின் முக்கியமான பதவியில் இருந்த ஜார்ஜ் பெர்னாண்டசும், சமதா கட்சியின் தலைவராக இருந்த ஜெயா ஜெட்லியும் அந்த காலகட்டத்திலும் வெளிப்படையாகவே இருந்தார்கள்.
 
ஜெயா ஜெட்லி மற்றும் ஜார்ஜ் பெர்னாண்டஸ் இருவரும், சமதா கட்சியில் 'ஒன்றாக பணியாற்றிய' கூட்டாளிகள் மட்டுமல்ல, அவர்களுக்கு இடையேயான உறவு சோசலிச சித்தாந்தத்துடன் தொடர்புடையதாக மட்டுமே இருந்ததில்லை என்று எழுத்தாளர் மற்றும் கட்டுரையாளர் ஷோபா டே கூறுகிறார்.
 
அவர்கள் இருவரிடையில் இருந்த ஆழமான உறவை இருவரும் எப்போதும் மறைக்க முயற்சித்ததில்லை என்று ஷோபா கூறுகிறார்.
 
அரசியல் போன்ற பொதுத்தளத்தில் பணியாற்றுபவர்கள், தங்கள் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பாக, சிறப்பான அடையாளத்தை வெளிகாட்டவே விரும்புவார்கள்.
 
கணவர், மனைவி மற்றும் குழந்தைகள் என முழு குடும்பமாக இருப்பது அமெரிக்க அரசியலில் எந்த அரசியல்வாதிக்கும் ஒரு சாதனை என்றே கருதப்படுகிறது. அப்படி ஒரே குடும்பமாக வசிப்பவர்கள் அதை தங்கள் சாதனையாக விளம்பரப்படுத்துவார்கள்.
 
இந்தியாவில் குடும்பமாக வாழ்வதுதான் மரியாதைக்குரியது. அதைத்தான் சமூகம் ஏற்றுக் கொள்ளும் என்ற நிலை உள்ளது. 'திருமணம் தாண்டிய உறவு' அல்லது இரண்டாவது திருமணம் என்பது சற்றே தரக் குறைவானதாக கருதப்படுகிறது. ஆனால் அரசியல்வாதிகள் இந்த இரண்டு பாதைகளிலும் பயணிக்கின்றனர். இந்திய மக்களும் அவர்களை நிராகரித்ததில்லை.
 
கர்நாடக மாநில முதலமைச்சர் எச்.டி.குமாரசாமிக்கும், திரைப்பட நடிகை ராதிகாவுக்கும் இடையிலான உறவுகளைப் பற்றி வாட்ஸ்அப் மற்றும் சமூக ஊடகங்களில் பலர் செய்திகளையும், துணுக்குகளையும் பகிர்ந்துக் கொண்டனர். ஆனால் இதுபற்றி சம்பந்தப்பட்ட இருவருமே எந்தவித கருத்தையும் சொன்னதில்லை.
 
ராதிகாவை தனது மனைவி என்று பொது இடங்களில் ஒருபோதும் எச்.டி. குமாரசாமி சொன்னதில்லை என்றாலும், இருவருக்கும் இடையிலான உறவை அவர் மறுத்ததும் கிடையாது.
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பேயி-யின் 'குடும்பம்' பற்றி பிரபலமாக பேசப்பட்டாலும், அது அவருடைய பிரபலத்தையும், செல்வாக்கையும் பாதிக்கவில்லை என்றே சொல்லலாம். ''நான் திருமணமாகாதவன், பிரம்மச்சாரி அல்ல; எனக்கு சிறந்த மனைவியின் தேடல் இருந்ததுபோல திருமதி.கெளலுக்கும் சிறந்த கணவனுக்கான தேடல் இருந்தது'' என்ற வாய்பேயின் வார்த்தைகள் பிரபலமானவை.
 
காதலால் கசிந்துருகிய இந்திய அரசியல்வாதிகள்
 
வாஜ்பேயி கல்லூரியில் படிக்கும்போது ராஜ்குமாரி கெளல், அவரது நெருங்கிய சிநேகிதியாக இருந்தபோதிலும், இருவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை. அதற்கான காரணமும் யாருக்கும் தெரியாது. ராஜ்குமாரி வேறொருவரை திருமணம் செய்துக் கொண்டார்.
 
பத்திரிகை ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் ராஜ்குமாரி இவ்வாறு கூறியிருக்கிறார், "எங்கள் இருவருக்குமான உறவு பற்றி பிறருக்கு விளக்கம் அளிக்க வேண்டிய அவசியம் இருப்பதாக நானும் வாஜ்பேயியும் ஒருபோதும் கருதியதேயில்லை.''
 
வாஜ்பேயி பிரதமராக இருந்த சமயத்தில் கெளல், ரேஸ்கோர்ஸ் சாலையில் இருந்த பிரதமரின் இல்லத்திலேயே வசித்தார். அவரின் இரண்டு மகள்களில் இளையவரான நமிதாவை அடல் பிஹாரி வாஜ்பேயி தத்து எடுத்துக் கொண்டார்.
சாதாரண மக்களின் தனிப்பட்ட வாழ்க்கையையும், அரசியல்வாதிகளின் சொந்த வாழ்க்கையையும் மக்கள் வெவ்வேறு அளவுகோல்களில் அளவிடுவது ஏன்? தங்கள் தலைவராக ஏற்றுக் கொள்பவர்களின் வாழ்க்கையைப் பற்றிய விமர்சனங்களை தவிர்ப்பதுதான் மரியாதை என்று கருதுகிறார்களோ?
கடந்த 2010ஆம் ஆண்டில், ஜெயா ஜெட்லி, ஜார்ஜ் பெர்னாண்டஸை சந்திக்கக்கூடாது என்று அவரது மனைவி லைலா கபீர் தடுத்துவிட்டார் என்பது பலருக்கு தெரியாது.
 
ஜெயா ஜெட்லியோடு லைலா கபீர்
 
2008ஆம் ஆண்டு ஜார்ஜுக்கு அல்சைமர் நோய் ஏற்பட்டபோது, அவருடைய நினைவுத் திறன் பாதிக்கப்பட்டது. மேலும் பிறரை அடையாளம் காணும் திறமும் குறைந்துவிட்டது.
 
லைலா கபீரின் தடைக்கு, நீதிமன்றத்தை அணுகிய ஜெயா ஜேட்லிக்கு நீண்ட போராட்டத்திற்கு பிறகு 2014ஆம் ஆண்டு நிவாரணம் கிடைத்தது. அதாவது 15 நாட்களுக்கு ஒருமுறை 15 நிமிடங்களுக்கு மட்டும் ஜெயா, பெர்னாண்டஸை சந்திக்கலாம் என்று நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
 
ஆனால் வாழ்க்கையில் பல திருப்புமுனைகள் எதிர்பாராமல் நிகழ்கின்றன. செவ்வாய்க்கிழமையன்று பத்திரிகையாளர்களிடம் பேசிய ஜெயா ஜெட்லி, ஜார்ஜ் பெர்னாண்டஸின் இறப்புச் செய்தியை தனக்கு தெரிவித்த லைலா கபீர், தன்னை வீட்டிற்கு வருமாறு அழைத்ததாகவும் கூறினார்.