வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : திங்கள், 27 அக்டோபர் 2014 (11:21 IST)

‘காந்திக்குப் பதிலாக நேருவை கொலை செய்திருக்கலாம்‘ ஆர்.எஸ்.எஸ். வாரஇதழ் கட்டுரையால் சர்ச்சை

நாட்டின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேருவை விமர்சித்து, கேரளத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பத்திரிகையில் வெளியிடப்பட்ட கட்டுரைக்கு அந்த மாநில காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
 
ஆர்எஸ்எஸ் அமைப்பின் மலையாளப் பத்திரிகையான ‘கேசரி'யில் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான பி.கோபாலகிருஷ்ணன் சமீபத்தில் ஒரு கட்டுரையை எழுதியிருந்தார்.
 
அதில், "நாட்டின் பிரிவினைக்கும், மகாத்மா காந்தியின் படுகொலை உள்ளிட்ட துயரச் சம்பவங்களுக்கும் உண்மையில் நேருதான் காரணம். சுயநலம் கொண்ட தலைவரான நேரு, நாட்டின் பிரிவினை குறித்த உண்மைகளை காந்தியிடம் இருந்து மறைத்து விட்டார். அது தொடர்பான இறுதிக்கட்ட விவாதங்களில் காந்தியைக் கலந்துகொள்ள விடாமல் அவர் தடுத்து விட்டார்' என்று அவர் எழுதியுள்ளார்.
 
அமலும், ஜவர்கலால் நேருவைவிட, காந்தியை துப்பாக்கியால் சுட்ட கோட்சேவே சிறந்தநபர் என்று கட்டுரையில் குறிப்பிட்டுள்ள எழுத்தாளர் கோபால் கிருஷ்ணன், கோட்சே தவறான நபரை கொலை செய்து விட்டார் என்றே தோன்றுகிறது. காந்திக்குப் பதிலாக நேருவை அவர் கொலை செய்திருக்கலாம்.
 
மகாத்மா காந்தியை கொலை செய்யும் முன்னதாக கோட்சே தனது சிரம் தாழ்த்தி மரியாதை செலுத்தினார். அதேநேரம் காந்திக்கு முன்பாக மரியாதை செலுத்துவதுபோல் நடித்த நேரு அவரின் முதுகில் கத்தியால் குத்தியுள்ளார்.
 
காந்தியின் படுகொலைக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. ஆனால் பழியை ஆர்.எஸ்.எஸ். மீது நேரு சுமத்திவிட்டார். என்று அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
 
இந்தக் கட்டுரை நேருவின் புகழைக் களங்கப்படுத்துவதாக உள்ளதாக கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலாவிடம் மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் சூரநாடு ராஜசேகரன் புகார் அளித்தார். இக்கட்டுரையை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
 
இதையடுத்து, இந்த விவகாரத்தை ஆராயுமாறும், தேவைப்பட்டால் நடவடிக்கை எடுக்குமாறும் மாநில டிஜிபி கே.எஸ்.பாலசுப்ரமணியத்துக்கு ரமேஷ் சென்னிதலா உத்தரவிட்டார்.
 
இந்நிலையில், கேசரியில் வெளியான கட்டுரைக்கு கடும் கண்டனம் தெரிவித்து கேரள மாநில காங்கிரஸ் தலைவர் வி.எம்.சுதீரன் கூறுகையில், "வரலாற்றைத் திரிக்கவும், நேருவின் பெயரைக் களங்கப்படுத்தவும் ஆர்எஸ்எஸ் மேற்கொண்டுள்ள மற்றொரு முயற்சி இது“ என்றார்.
 
எனினும், காங்கிரஸின் இந்தக் குற்றச்சாட்டை ‘கேசரி' பத்திரிகையின் ஆசிரியர் என்.ஆர்.மது மறுத்தார்.
 
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
 
நேருவின் கொள்கைகள் குறித்து நாங்கள் விமர்சிப்பதும், தேசப் பிரிவினை உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவிப்பதும் இது முதல் முறையல்ல.
 
‘காந்திக்குப் பதிலாக, நேருவைத்தான் கோட்சே குறிவைத்திருக்க வேண்டும்' என்று அந்தக் கட்டுரையில் எழுதப்பட்டுள்ளதாக காங்கிரஸார் குற்றம் சாட்டுவது தவறானது. ‘நேருவை உடல்ரீதியாகத் தாக்கியிருக்க வேண்டும்' என்று அந்தக் கட்டுரையில் எங்குமே குறிப்பிடப்படவில்லை.
 
காங்கிரஸ் தலைவர்கள் அரசியல் நோக்கங்களுக்காக உண்மைகளைத் திரித்து கருத்து கூறியுள்ளனர். ஆர்எஸ்எஸ் அமைப்பையும், பாஜகவையும் எதிர்ப்பதில் மார்க்சிஸ்ட் கட்சியை விட தாங்கள் தீவிரமாக இருப்பதாகக் காட்டிக் கொள்வதற்காக காங்கிரஸ் மேற்கொண்டுள்ள சதித் திட்டம்தான் இது என்றார் என்.ஆர்.மது.
 
இதனிடையே, ‘கேசரி' பத்திரிகையில் வெளியான கட்டுரைக்கும், தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று ஆர்எஸ்எஸ் மேலிடம் விளக்கமளித்துள்ளது.
 
இது குறித்து அந்த அமைப்பின் மூத்த தலைவர் மன்மோகன் வைத்யா, வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
‘கேசரி' பத்திரிகையில் கடந்த 17ஆம் தேதி வெளியான சர்ச்சைக்குரிய கட்டுரையை ஆர்எஸ்எஸ் வன்மையாகக் கண்டிக்கிறது. அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்துகள் அனைத்தும் அதை எழுதியவரின் சொந்தக் கருத்துகளாகும்.
 
அதற்கும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எனவே அந்தக் கட்டுரையை எழுதிய கோபாலகிருஷ்ணனின் கருத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை‘ என்று மன்மோகன் வைத்யா தெரிவித்துள்ளார்.