செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 1 ஏப்ரல் 2015 (14:30 IST)

இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல், டீசல் விலை குறைகிறது

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் வீழ்ச்சி அடைந்ததை அடுத்து பெட்ரோல், டீசல் விலையை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
 
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப நிர்ணயம் செய்யப்படுகிறது. இதனால், கடந்த சில மாதங்களாக கச்சா எண்ணெய் விலையில் தொடர்ந்து வீழ்ச்சி அடைந்ததையொட்டி, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலைகள் கணிசமாக குறைந்தன.
 
ஆனாலும், கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி பெட்ரோல் விலை 82 காசுகளும், டீசல் விலை 61 காசுகளும் உயர்த்தப்பட்டது. பிறகு மார்ச் 1ஆம் தேதி பெட்ரோல் விலை 3.18 ரூபாயும், டீசல் விலையும் 3 ரூபாயும் உயர்த்தப்பட்டது.
 
இந்நிலையில், தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் மேலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதை அடுத்து, பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
 
பெட்ரோல் விலை லிட்டருக்கு 51 காசும், டீசல் விலை லிட்டருக்கு 1 ரூபாய் 31 காசும் குறைக்கப்பட உள்ளது. இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. சென்னையில் தற்போது 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ.63.26 ஆக உள்ளது. அது ரூ.62.75 ஆக குறையும்.