வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: சனி, 22 நவம்பர் 2014 (13:03 IST)

குடும்ப ஆட்சியை அகற்றி நாட்டின் வளர்ச்சிக்கு வித்திடுங்கள்: ஜார்கண்ட் பிரச்சாரத்தில் மோடி

ஜார்கண்ட் மாநில தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, குடும்ப ஆட்சியை அகற்றி வளர்ச்சிக்கு வித்திட வேண்டும் என்று  கூறினார்.
 
ஜார்கண்ட் மாநில சட்டமன்றத்துக்கான முதற்கட்ட தேர்தல் வருகின்ற 25 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து அங்கு, அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. பாஜக சார்பில் டல்டான் கஞ்ச் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது, ''ஜார்கண்ட் மாநிலத்தில் ஏராளமான இயற்கை வளங்கள் இருந்தபோதும், ஏழை மாநிலமாக காட்சியளிக்கிறது. இதற்கு முந்தைய அரசுகளே காரணம்.
 
இந்த மாநிலத்தில் 5 ஆறுகள் ஓடும்போதும், இங்குள்ள விவசாயிகளின் நிலத்துக்கு தண்ணீர் இல்லை. இங்குள்ள கிராம மக்கள் குடிநீருக்காக கஷ்டப்படுகிறார்கள். ஜார்கண்டிலும், ஆஸ்திரேலியாவிலும் ஏராளமான நிலக்கரி சுரங்கங்கள் உள்ளன. அந்தவகையில், ஆஸ்திரேலியாவுக்கும், ஜார்கண்டுக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. ஆனால், ஆஸ்திரேலியா வளமிக்கதாகவும், ஜார்கண்ட் ஏழை மாநிலமாகவும் உள்ளது. இதற்கு நீங்கள் பெற்றிருந்த அரசுகள், உங்கள் கனவுகளை தகர்த்ததே காரணம்.
 
இங்கு, குடும்ப ஆட்சியால் மாநிலம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு கொள்ளையடித்த பிறகும், அவர்களுக்கு எந்த வெட்கமும் இல்லை. இந்த மாநிலத்தில், அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துள்ளது. அதனால், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் வளர்ச்சிப்பாதையில் ஜார்கண்ட் மாநிலம் பயணிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், தந்தை-மகன், சசோதரர்-மருமகன் போன்ற குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்.
 
நான் குஜராத்தில் முதல்வராக இருந்தபோது கூட, மத்திய அரசு எங்களை காயப்படுத்தியது. ஆனாலும், நாங்கள் மத்திய அமைச்சர்களை எங்கள் மாநிலத்துக்குள் அனுமதிக்கமாட்டோம் என அறிவிக்கவில்லை. ஆனால், மத்திய அமைச்சர்களை ஜார்கண்டில் அனுமதிக்கமாட்டோம் என மாநில அரசு அறிவித்துள்ளது. மோடி அரசில் இருந்து எந்த அமைச்சராவது வந்தால், தங்களின் ஊழல் அம்பலமாகி விடும் என அவர்களுக்கு தெரியும். அதனால் தான் இவ்வாறு அறிவித்துள்ளனர்.
 
விவசாயிகளின் முன்னேற்றம் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுதான் எங்கள் அரசின் மிக முக்கிய நோக்கமாகும். இங்கு அமைந்த முந்தைய அரசுகள் அனைத்தும், மாநில பிரச்சனைகளை அணுக வெட்கப்பட்டன. ஆனால் நாங்கள் இவற்றை ஒரு சவாலாக எடுத்துள்ளோம். ஜன்தன் யோஜனா திட்டத்தை சிறப்பாக செய்துள்ளோம். இதன் மூலம் 60 ஆண்டுகளில் செய்ய முடியாததை, 60 நாட்களில் செய்து முடித்துள்ளோம்" என்றார்.