வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: புதன், 19 நவம்பர் 2014 (16:13 IST)

ஹரியானா சாமியார் ராம்பால் ஆசிரமத்திலிருந்து 4 உடல்கள் மீட்பு

ஹரியானா மாநிலத்தில் உள்ள சாமியார் ராம்பால் ஆசிரமத்திலிருந்து 4 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் உடல்நிலை மோசமான நிலையில் இருந்த குழந்தை உட்பட இருவர் பலியாகி உள்ளனர்.
 
ஹரியானா மாநிலம் பர்வாலாவில் சாமியார் ராம்பாலின் ஆசிரமம் உள்ளது. கடந்த 2006 ஆம் ஆண்டில் ஆசிரமத்தில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக ராம்பால் மீது வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் 43 முறை சம்மன் அனுப்பியும் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாத நிலையில், பஞ்சாப்-ஹரியானா உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து ராம்பால் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது, அவரை கைது செய்ய இரண்டு முறை பிடிவாரண்ட் பிறப்பித்தது. ஆனால் ராம்பாலின் ஆதரவாளர்கள் அவரை கைது செய்ய விடாமல் போலீஸாரை தடுத்தனர். இதனால் அதிருப்தி அடைந்த உயர் நீதிமன்றம் திங்கட்கிழமை மீண்டும் பிடிவாரண்ட் பிறப்பித்தது.
 
ஹரியானா மாநிலம் ஹிசார் அருகே பர்வாலாவில் 12 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஆசிரமத்தில் ராம்பால் பதுங்கியிருப்பதாகக் தெரியவந்ததை அடுத்து சாமியாரை கைது செய்ய காவல்துறையினர் விரைந்தனர். ஆனால் அந்த ஆசிரமத்தை சுற்றிலும் ராம்பாலின் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கான காவல்துறையினருடன் மோதலில் ஈடுப்பட்டனர். அவரது ஆதரவாளர்கள் குண்டுகளை வீசியதில் காவல்துறையினர் படுகாயமடைந்தனர். இதனால் அந்த பகுதியில் இரண்டாவது நாளாக பதற்றம் நீடித்து வருகிறது.
 
இந்த நிலையில் சாமியார் ராம்பாலின் ஆசிரத்திற்கு வெளியே 70 வயது மூதாட்டியான ராஜ் பாலா, டெல்லியை சேர்ந்த சவிதா(31), பஞ்சாபைச் சேர்ந்த ரஜனி(20) ஆகியோரின் உடல்கள் இன்று (புதன்கிழமை) காலை கண்டெடுக்கப்பட்டதாக ஹரியானா டிஜிபி எஸ்.என்.வஹிஸ்ட் தெரிவித்துள்ளார்.
 
இவர்களில் ரஜனி என்ற இளம்பெண் இருதய கோளாறுடன் இன்று காலை மீட்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அங்கிருந்து மீட்கப்பட்ட குழந்தை உட்பட மற்றொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
 
இதனிடையே இறந்து கண்டெடுக்கப்பட்டவர்களின் உடலில் காயம் எதுவும் தென்படவில்லை என்றும், பிரேதப் பரிசோதனை அறிக்கைக்கு பிறகே அவர்களின் மரணத்திற்கான காரணம் தெரிய வரும் எனவும் வஹிஸ்ட் கூறினார். ராம்பால் இன்னும் ஆசிரமத்தில் உள்ளே பதுங்கி இருப்பதாகவும் ஹரியானா காவல்துறையினர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.