செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: வியாழன், 22 ஜனவரி 2015 (17:56 IST)

பாஜகவில் இணைந்தாரா சவுரவ் கங்குலி?: மேற்குவங்க அரசியலில் பரபரப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, பாஜகவில் இணைய உள்ளதாக வெளியான தகவல் மேற்குவங்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கங்குலி கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, கிரிக்கெட் விளையாட்டின் வர்ணனையாளராக இருந்துவருகிறார். இந்நிலையில் அவர்  விரைவில் பாஜகவில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது.
 
பாஜகவின் மூத்த தலைவர்களுடன் கங்குலி தொடர்பில் இருப்பதாகவும், இதே போல பாஜகவின் தலைமையும், கட்சியின் மூத்த தலைவர்களும்  கங்குலியுடன் தொடர்பில் இருப்பதாகவும் அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 
மேற்கு வங்காள மாநிலத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு ஆட்சியைப் பிடிக்கும் இலக்குடன் பாஜக செயல்பட்டு வருகிறது.
 
அதனால் மம்தாவின் செல்வாக்கை சரிய செய்ய, புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரான கங்குலியை தங்கள் பக்கம் இழுக்க அந்த கட்சி ஏற்கெனவே முடிவு செய்து இருந்தது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கொடுக்க முன் வந்தது. ஆனால் அவர் அதை நிராகரித்தார்.
 
தற்போது பாஜக தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதால், கங்குலி அந்த கட்சியில் விரைவில் சேர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
42 வயதாகும் கங்குலி இந்தியாவின் வெற்றி கேப்டன்களில் ஒருவர் ஆவார். 113 டெஸ்ட் மற்றும் 311 ஒருநாள் போட்டியில் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இதனிடையே தாம் பாஜகவில் இணைய உள்ளதாக வெளியான தகவலை மறுத்துள்ள கங்குலி, இது உண்மைக்கு புறம்பானது என்றும் கூறியுள்ளார்.