1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : வியாழன், 6 நவம்பர் 2014 (08:28 IST)

மேலும் பல துறைகளில் அன்னிய முதலீடுகளை மத்திய அரசு அனுமதிக்கவுள்ளது - அருண் ஜேட்லி

டெல்லியில் 2 நாள்கள் நடைபெறும் இந்தியப் பொருளாதார மாநாட்டைத் தொடக்கி வைத்துப் பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி மேலும் பல துறைகளில் அன்னிய முதலீடுகளை மத்திய அரசு அனுமதிக்கவுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
 
தொழிலாளர் நலத் துறை, நிலம் கையகப்படுத்துதல், காப்பீட்டுச் சட்டங்கள் ஆகியவற்றில் மேலும் பல சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட இருப்பதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.
 
ஜெனீவாவை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் உலக பொருளாதார அமைப்பின் (டபிள்யூ.இ.எஃப்.) சார்பில், இந்தியப் பொருளாதார மாநாடு, டெல்லியில் 2 நாள்கள் நடைபெறுகிறது. இந்த மாநாட்டை புதன்கிழமை தொடங்கிவைத்தார் அருண் ஜேட்லி. 
 
இது குறித்து அருண் ஜேட்லி கூறியதாவது:-
 
மத்திய அரசு நிறைவேற்ற வேண்டிய பணிகள், நூற்றுக்கும் மேல் இருப்பினும், அதில் முக்கிய கவனம் கொடுத்து உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டியது பொருளாதாரச் சீர்திருத்தமே. கடந்த 2 அல்லது 3 ஆண்டுகளாகவே இந்தியாவை உலக நாடுகள் கவனித்து வருகின்றன.
 
முன்கூட்டியே வரி விதிப்பு என்பது தவறான யோசனையாகும். அதனால், இந்தியப் பொருளாதாரம்தான் பாதிக்கப்படும்.
 
தொழிலாளர் சட்டங்களில் சில ஷரத்துகளை திருத்தம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக நீண்டகாலமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
 
இந்த விவகாரத்தில் சிலர் தங்களுக்கு என்று தனி நிலைப்பாட்டைக் கொண்டுள்ளனர். அதனால், நாடாளுமன்றத்தின் அனுமதியை என்னால் உடனடியாக பெற்று விட முடியுமா என்று தெரியவில்லை. நெகிழ்வுத் தன்மையான கொள்கையால், அதிக வேலைவாய்ப்புகள் கிடைக்கும் எனப் பொதுமக்களுக்கு அரசு தெரிவிக்க வேண்டியுள்ளது.
 
நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தைப் பொருத்தமட்டில், அதில் இடம்பெற்றுள்ள முரண்பாடான ஷரத்துகளில் மாற்றம் செய்யப்படவுள்ளது.
 
அதாவது, இந்தச் சட்டத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்ட நிலம் தனியார் மருத்துவமனைகள் அல்லது பள்ளிகள் கட்டுவதற்கு பயன்படுத்தப்படக் கூடாது என்பது போன்ற முரண்பாடான ஷரத்துகள் இடம் பெற்றுள்ளன. அதில் மாற்றம் செய்ய வேண்டியுள்ளது.
 
தனியார்மயமாக்கல் விவகாரத்தில், மேலும் பல துறைகளில் அன்னிய முதலீடுகளை மத்திய அரசு அனுமதிக்கவுள்ளது. மத்தியில் முன்பு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, தாராளமயத்தைப் பின்பற்றியது.
 
முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காகவே, ரயில்வே, பாதுகாப்பு துறைகளில், அன்னிய முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. பரிசோதனை முயற்சியான இதில் வெற்றி கிடைத்தால், மேலும் பல துறைகளில் வெளிநாட்டு முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப்படும்.
 
காப்பீட்டுச் துறையில் அன்னிய நேரடி முதலீட்டு அளவை 26 சதவீதத்தில் இருந்து 49 சதவீதமாக உயர்த்துவதற்கு அனுமதிக்கும் வகையில், காப்பீட்டு சட்டத் திருத்த மசோதா உருவாக்கப்பட்டது.
 
அந்த மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படாமல் நீண்டகாலமாக நிலுவையில் உள்ளது. வரும் குளிர்காலக் கூட்டத் தொடரில், அந்த மசோதாவுக்கு நாடாளுமன்றம் தனது ஒப்புதலை அளிக்கும் என நம்புகிறேன்.
 
பொதுமக்கள் பயன்படுத்தி வரும் பல அத்தியாவசியப் பொருள்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது. இதில், பெட்ரோல்- டீசலுக்கு அளிக்கப்பட்ட மானியம் நிறுத்தப்பட்டு, அதன் விலை நிர்ணய அதிகாரம், எண்ணெய் நிறுவனங்களிடம் வழங்கப்பட்டு விட்டது. 
 
இதுபோக பிற மானியங்களை முறைப்படுத்துவதைக் கண்காணிப்பதற்காக செலவின மேலாண்மைக் குழுவை மத்திய அரசு நியமிக்கவுள்ளது.
 
அதேசமயம், அனைத்து மானியங்களையும் ரத்து செய்யும் எண்ணம் அரசுக்கு கிடையாது. ஏனெனில், இந்தியப் பொருளாதாரத்தின் சில பிரிவுகளுக்கும், மக்களுக்கும் அரசின் ஆதரவு தேவைப்படுகிறது.
 
உலக வர்த்தக அமைப்பின் வணிகம் தொடர்பான ஒப்பந்தத்தை இந்தியா எதிர்க்கவில்லை. இந்த விவகாரத்தில், பணக்கார நாடுகளால் தற்போது எழுந்துள்ள பிரச்னைக்கு தீர்வு எட்டப்படும்வரை, தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்றே இந்தியா விரும்புகிறது என்று அருண் ஜேட்லி தெரிவித்தார்.
 
மேலும், ‘நஷ்டத்தில் செயல்படும் முக்கியமான சில பொதுத் துறை நிறுவனங்கள் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. அந்த நிறுவனங்கள் தனியாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.
 
நஷ்டத்தில் செயல்படும் சில பொதுத் துறை நிறுவனங்களுக்குத் தேவையான உதவிகளை தற்போது அரசு செய்து வருகிறது. இவ்வாறு அரசு உதவி செய்வது அந்தப் பிரச்னைக்கு நீண்டகாலத் தீர்வாக இருக்காது.
 
அந்த நிறுவனங்களை இப்படியே விடுவதா? அல்லது தனியாரிடம் ஒப்படைப்பதா? என்ற 2 திட்டங்கள் அரசின் முன் உள்ளன. இதேநிலையில் விட்டால், அந்த நிறுவனங்கள் மூடப்பட்டு, அதில் பணிபுரிபவர்கள் வேலையை இழக்கும் நிலை நேரிடும்.
 
எனவே, 2ஆவது திட்டமான தனியாரிடம் ஒப்படைப்பது என்பதை அரசு தேர்வு செய்துள்ளது. இதில் வெளிநாட்டு முதலீடுகளைப் பொருத்தமட்டில், இந்தியப் பொருளாதாரம் உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு துறைவாரியாக அரசு முடிவெடுக்கும் என்றார் அருண் ஜேட்லி.