வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : செவ்வாய், 29 ஜூலை 2014 (11:03 IST)

எக்ஸ்பிரஸ் ரயில்களில் 2 ஆம் வகுப்பு பெட்டிகள் ரத்து ஏசி பெட்டிகள் அதிகரிப்பு

எக்ஸ்பிரஸ் மற்றும் சூப்பர்பாஸ்ட் ரயில்களில் 2 ஆம் வகுப்பு பெட்டிகளின் எண்ணிக்கையை குறைத்து அதற்கு பதிலாக 3 அடுக்கு ஏ.சி. வசதி கொண்ட பெட்டிகள் எண்ணிக்கையை அதிகரிக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது.

ரயில்களில் நவீன வசதிகள் என்ற பெயரில், பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன இதனால் நடுத்தர மக்கள் பயணம் செய்யும்  இருக்கைகள் குறைவதுடன், மூன்று மடங்குக்கும் அதிகமான கட்டணத்தை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

முதல் கட்டமாக தெற்கு ரயில்வேயில் இந்த மாற்றத்தை ரயில்வே அமல்படுத்தி உள்ளது. கூடுதல் கட்டண சுமை, பயணிகள் இடையே  கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

எர்ணாகுளம்- நிஜாமுதீன் மங்களா எக்ஸ்பிரஸ் (எண் 12617) ரயிலில் நேற்று முன்தினம் எஸ் 2 என்ற  இரண்டாம் வகுப்பு பெட்டி அகற்றப்பட்டது. அதற்குப் பதிலாக பி 4 என்ற மூன்றடுக்கு ஏ.சி. பெட்டி இணைக்கப்பட்டது. எஸ் 2 பெட் டிக்கு முன்பதிவு செய்தவர்களுக்கு, தட்கல் டிக்கெட்டுகள் அளிக்கப்பட்டன. அதனால் குடும்பமாக வந்தவர்கள் தனித்தனி பெட்டிகளில் அமர வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்த ரயிலில் இதுவரை 11 இரண்டாம் வகுப்பு பெட்டிகள், 3 மூன்றடுக்கு ஏ.சி. பெட்டிகள், 2 இரண்டு அடுக்கு ஏ.சி. பெட்டிகள் இருந்தன. தற்போது இது முறையே 10, 4, 2 என்று மாற்றப்பட்டுள்ளது. எர்ணாகுளம்-நிஜாமுதீன் இடையே இயக்கப்படும் ரயிலில் இரண்டாம் வகுப்பு கட்டணம் ரூ.925. அதே நேரத்தில் மூன்றடுக்கு ஏ.சி. பெட்டிக்கான கட்டணம் ரூ.2,370. இந்த கூடுதல் கட்டண சுமை, பயணிகள் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சென்ட்ரல் - கோவை சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் எஸ் 2 இரண்டாம் வகுப்பு பெட்டிக்கு பதிலாக மூன்று அடுக்கு ஏசி பெட்டி சேர்க்கப்படுகிறது. இதேபோல், மறுமார்க்கத்தில் இயக்கப்படும் சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலிலும் இதே மாற்றம் செய்யப்படுகிறது.

சென்னை - திருச்சி சோழன் எக்ஸ்பிரஸ், சென்னை சென்ட்ரல் - அகமதாபாத் நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் இதே போன்று மாற்றங்கள் செய்யப்படுகிறது. சென்னை எழும்பூர் - மங்களூர் சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் (எண் 16859) ரயிலில் எஸ் 7 இரண்டாம் வகுப்பு பெட்டி நீக்கப்பட்டு 2 ஆம் வகுப்பு அமரும் வசதி கொண்ட பெட்டி சேர்க்கப்பட்டது.

மங்களூர் சென்ட்ரல் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் (எண் 16860) ரயிலில் எஸ் 9 இரண்டாம் வகுப்புப் பெட்டி நீக்கப்பட்டு 2 ஆம் வகுப்பு அமரும் வசதி கொண்ட பெட்டி சேர்க்கப்படுகிறது.

இது குறித்து பாலக் காடு கோட்ட ரயில்வே அதிகாரிகள் கூறுரகையில் இரண்டாம் வகுப்புப் பெட்டிகளைத் தயாரிப்பதை ரயில்வே வாரியம் வெகுவாக குறைத்துள்ளது. அதே நேரத்தில் ஏ.சி. பெட்டிகள் அதிகளவில் தயாரிக்கப்படுகிறது.

இரண்டாம்  வகுப்பு பெட்டிகளை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக மூன்றடுக்கு ஏ.சி. பெட்டிகளை படிப்படியாக சேர்க்கும்படி உத்தரவு வந்துள்ளது“ என்று தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ரயில்வே வாரிய அதிகாரிகளிள் கூறுகையில் “நாடு முழுவதும் எக்ஸ்பிரஸ் மற்றும் சூப்பர்பாஸ்ட் ரயில்களில் 2 ஆம் வகுப்பு பெட்டிகள் படிப்படியாக நீக்கப்பட்டு, ஏ.சி. பெட்டிகள் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அடுத்த 5-6 ஆண்டுகளில் இந்த ரயில்களில் 2 ஆம் வகுப்பு பெட்டி இருக்காது.

இந்த நடவடிக்கையால் ரயில்வேக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும். பயணிகளுக்கு சுகமான பயணம், மிகச் சிறந்த வசதிகள் கிடைக்கும்.  நீக்கப்படும் இரண்டாம் வகுப்பு பெட்டிகள், நடுவில் உள்ள பெர்த்தை நீக்கிவிட்டு பாசஞ்சர் ரயில்களில் பயன்படுத்தப்படும்“ என்றும் ரயில்வே வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2 ஆம் வகுப்பு பெட்டிகளை நீக்குவதால் ஏ.சி. பெட்டியில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கு மூன்று  மடங்குக்கும் அதிகமான கட்டணத்தை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.