1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வெள்ளி, 28 ஆகஸ்ட் 2015 (18:30 IST)

சத்தீஸ்கரில் 13 பெண்கள் பலியானதற்கு காலாவதியான மருந்தே காரணம்

குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த 13 பெண்கள் பலியானதற்கு காலாவதியான, விஷமான மருந்துகள் தான் காரணம் என்று விசாரணை கமிஷன் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
 
சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள சாகரி கிராமத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ம் தேதி பெண்களுக்கான குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை முகாம் நடைபெற்றது. இதேபோல் அங்குள்ள கவுரில்லா, பெந்திரா, மார்வாகி ஆகிய கிராமங்களில் நவம்பர் 10ஆம் தேதி குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை முகாம் நடைபெற்றது.
 
இந்த முகாம்களில் அறுவை சிகிச்சை பெற்றபெண்கள் 13 பேர் மருந்து சாப்பிட்ட சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தனர். இது பற்றி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.
 
அந்த கமிஷன் விசாரணை நடத்தி ஆகஸ்ட் 10ஆம் தேதி அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்தது. இந்த அறிக்கை மீது முதல்வர் ராமன்சிங் தலைமையில் புதன்கிழமை நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.
 
கூட்டம் முடிந்த பின்னர் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அஜய் சந்திரகர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “விசாரணையில் காலாவதியான, விஷமான மருந்துகள் மற்றும் மருத்துவ அலட்சியம் தான் அறுவை சிகிச்சை செய்த 13 பெண்கள் பலியானதற்கு காரணம் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
 
இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அந்த மருந்துகளை உற்பத்தி செய்த தொழிற்சாலைகள், அவற்றை மருத்துவமனைக்கு வழங்கிய நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.