வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By கே.என்.வடிவேல்
Last Modified: திங்கள், 14 மார்ச் 2016 (23:24 IST)

கலால் வரியை உடனே ரத்து செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின் கோரிக்கை

கலால் வரியை உடனே ரத்து செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின் கோரிக்கை

கலால் வரியை உடனே ரத்து செய்ய வேண்டும் என  மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
 

 
இது குறித்து, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- 
 
மத்திய அரசின் 2016 ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையில் தங்க நகைக்கு 1 சதவீதம் கலால் வரி விதிக்கப்பட்டதை எதிர்த்து நாடு முழுவதும் நகை வியாபாரிகள், நகை பட்டறைகளில் பணியாற்றி வரும் பொற்கொல்லர்கள், தங்க நகைத் தயாரிப்பாளர்கள் எல்லாம் இணைந்து நாடு முழுவதும் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
 
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இப்போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மத்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜெட்லியிடம் முறையிட்டும் இன்னும் அந்த வரி நீக்கப்படவில்லை என்பது நகை வியாபாரிகளை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
 
தங்கத்திற்கு பத்து சதவீத இறக்குமதி வரியும் ஒரு சதவீத வாட் வரியும் ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தங்க நகைக்கு ஒரு சதவீத கலால் வரி என்று தற்போது மத்திய அரசு தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கையில் அறிவித்திருப்பது தங்க நகை தொழிலை நசுக்கி விடும்.
 
அதுமட்டுமின்றி பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் லட்சக்கணக்கானோரை பாதிக்கும் இந்த கலால் வரி விதிப்பு பற்றி தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இதுவரை வாய் திறக்கவில்லை. மத்திய நிதி அமைச்சருக்கு ஒரு கடிதம் எழுதிக் கூட நகை வியாபாரிகளின் கோரிக்கையை வலியுறுத்தவில்லை.
 
எனவே, நகை தொழிலையும், நகை வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்களையும் பாதிக்கும் இந்த கலால் வரி உயர்வை திரும்பப் பெற வேண்டும்.
 
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி இந்த விஷயத்தில் தனிக் கவனம் செலுத்தி, போராடி வரும் நகை வியாபாரிகளின் கோரிக்கையை பரிசீலித்து, கலால் வரியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.