1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : செவ்வாய், 28 ஏப்ரல் 2015 (14:39 IST)

நிலநடுக்கம், சுனாமி போன்ற பேரிடர்களை அறிய 3 செயற்கை கோள்கள்: இஸ்ரோ தலைவர் தகவல்

சுனாமி, நிலநடுக்கம் போன்ற பேரிடர்களை முன்கூட்டியே அறிய, 3 செயற்கை கோள்கள் ஜூன் 9 ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் கிரண் குமார் கூறியுள்ளார். 
 
இது குறித்து செய்தியாளர்களிடம்  கிரண் குமார் கூறியதாவது:-
 
உலகில் ஏற்படும் சுனாமி,  நிலநடுக்கம் போன்ற பேரழிவு பேரிடர்களை முன்னதாக அறிந்து மக்களை பாதுகாக்க வசதியாக 3 செயற்கை கோள்களை இஸ்ரோ தயாரித்து வருகிறது. அதற்கான பணிகள் நிறைவடைந்து ஜூன் 9 ஆம் தேதி விண்ணில் செலுத்த இருக்கிறோம்.         
 
தரை மற்றும் கடல் வழி போக்குவரத்து, தகவல்தொழில்நுட்பம் போன்றவற்றிற்காக ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.சை சேர்ந்த 7 செயற்கை கோள்களை இஸ்ரோ விண்ணில் செலுத்த முடிவு செய்யப்பட்டது.
 
இதில் 4 செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டு விட்டன. அவைகள் திட்டமிட்டப்படி சுற்றுவட்ட பாதையில் பயணித்து பயனுள்ள தகவல்களை அனுப்பி வருகின்றன.
 
5 ஆவது செயற்கை கோள் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. 6 மற்றும் 7 ஆவது செயற்கை கோள்கள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் விண்ணில் செலுத்தப்படும்.
 
மிகவும் முக்கியமான செயற்கை கோளான ஜி.எஸ்.எல்.வி.- மார்க்-3 அடுத்த ஆண்டு டிசம்பர் இறுதிக்குள் விண்ணில் செலுத்துவதற்கான அனைத்து ஆயத்த ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம். 
 
ஜி.எஸ்.எல்.வி.-மார்க்-3 வெற்றிகரமாக விண்ணில் பறக்கும் நாள் இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த நாளாக கருதப்படும். இவ்வாறு இஸ்ரோ தலைவர் கிரண் குமார் தெரிவித்தார்.