1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Modified: புதன், 25 நவம்பர் 2015 (22:43 IST)

டெல்லியில் அப்துல்கலாம் தேசிய அறிவுசார் மையம்: அமைச்சர் கபில்மிஸ்ரா உறுதி

டெல்லியில், அப்துல்கலாம் தேசிய அறிவுசார் மையம் விரைவில் அமைக்கப்படும் என்று டெல்லி மாநில பண்பாட்டுத்துறை அமைச்சர் கபில்மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து மாநில பண்பாட்டுத்துறை அமைச்சர் கபில்மிஸ்ரா வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாமின் மூத்த சகோதரர் ஏ.பி.ஜே.முகமது முத்து மீரான்லெப்பை மரைக்காயர் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில், டெல்லியில், டாக்டர் அப்துல்கலாம் அறிவுசார் மையம் அமைக்க வேண்டும் என கோரிக்கைவிடுத்தார்.
 
அவர்களது குடும்பத்தினரின் வேண்டுகோளை ஏற்று, டெல்லி மாநில அரசு, டாக்டர் அப்துல்கலாம் முன்பு டெல்லியில் குடியிருந்த எண்.10, ராஜாஜி மார்க் இல்லத்தில் இருந்து ராமேசுவரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்ட அவருடைய நூல்கள் உள்ளிட்ட உடமைகளை மீண்டும் டெல்லிக்கு எடுத்து வந்து டெல்லி மாநில அரசின் ஏற்பாட்டில் டாக்டர் அப்துல்கலாம் அறிவுசார் மையம் நிறுவதற்கு தேவையான அனைத்து முயற்சிகளும் செய்து வருகிறது.
 
மேலும், அப்துல் கலாம் நினைவை போற்றும் வகையில் டெல்லியில் உள்ள ‘டெல்லி ஹாட்’ வளாகத்தில் பிரமாண்டமான கண்காட்சி ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்படும். இது தற்காலிகமானதாக இருக்கும். சில மாதங்களுக்கு பிறகு, நிரந்தர அறிவுசார் மையம் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.