1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By Veeramani
Last Modified: சனி, 19 ஏப்ரல் 2014 (18:19 IST)

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது பற்றி பாஜக வேட்பாளருடன் பேசி மாட்டிக்கொண்ட பாபா ராம்தேவ் - காங்கிரஸ் தேர்தல் ஆணையத்தில் புகார்

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது தொடர்பாக சாமியார் பாபா ராம்தேவும், பாஜக வேட்பாளரும் பேசும் வீடியோ மற்றும் ஆடியோ வெளியாகியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக முன்னாள் எம்.எம்.ஏ. மகந்த் சந்த் நாத் போட்டியிடுகிறார். ஆல்வாரில் மகந்த் சந்த் நாத்தும், பாபா ராம்தேவும் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது ஒரு செய்தியாளர்கள் அவர்களது பேட்டியை எடுக்க மைக்ரோ போன்களை இருவருக்கும் முன்னால் வைத்திருந்தனர். வீடியோவும் எடுத்தனர்.
 
அப்போது மகந்த் சந்த் நாத்தும், ராம்தேவும் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது சம்பந்தமாக மெதுவாக பேசிக் கொண்டனர். இது மைக்ரோ போன் மூலம் செய்தியாளர்களுக்கு கேட்டது. உடனே உஷாரான பாபா ராம்தேவ், வேட்பாளரை பார்த்து, "பைத்தியமே பணம் கொடுப்பதைப் பற்றி பேசாதே, நாம் பேசுவது போனில் அவர்களுக்கு கேட்டுவிடப் போகிறது" என்று கூறி பேசுவதை தடுத்துவிடுகிறார்.
 
இந்த உரையாடல் வீடியோவிலும் பதிவாகியது. அதன்பிறகு பணம் கொடுப்பது பற்றி பேசிய இந்த வீடியோ காட்சிகள் ராஜஸ்தானில் உள்ளூர் தொலைகாட்சிகளில் ஒளிபரப்பாகி பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று சில தொலைக்காட்சிகளில் நாடு முழுவதும் ஒளிபரப்பானது.
 
இதுபற்றி தெரிய வந்ததும் காங்கிரசார் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தனர். வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது சம்பந்தமாக ராம்தேவும், வேட்பாளர் ஆல்வாரும் பேசியிருக்கிறார்கள், வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பவர்களையோ, பணம் வாங்குபவர்களையோ கைது செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் கூறுகிறது. எனவே இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.
 
சம்பந்தப்பட்ட வீடியோ காட்சியும், ஆதாரமாக கொடுக்கப்பட்டுள்ளதால் இருவருக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. புகார் தொடர்பாக தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி வருகிறது.