வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Ilavarasan
Last Updated : புதன், 23 ஜூலை 2014 (19:33 IST)

பரிசோதனை கூடங்களுடன் சேர்ந்து கொள்ளையடிக்கும் மருத்துவர்கள்: டி.வி. சேனல் அம்பலப்படுத்தியது

பரிசோதனை கூடங்களுக்கு நோயாளிகளை அனுப்பி வைத்து, அதற்கு மருத்துவர்கள் கமிஷன் பெறுவது டி.வி. சேனல் ஒன்றின் ரகசிய படப்பிடிப்பில் அம்பலத்துக்கு வந்துள்ளது. இது குறித்து மத்திய அரசு விசாரணைக்கு உத்தரவிட்டது.
 
மருத்துவர்களை ஒவ்வொரு நோயாளியுமே தெய்வமாகத்தான் பார்க்கிறார்கள். ஆனால் அப்படிப்பட்ட மருத்துவர்கள், மருத்துவ பரிசோதனைக்கூடங்களுடன் கூட்டு சேர்ந்து நோயாளிகளிடம் எப்படியெல்லாம் பணத்தைக் கறக்கிறார்கள், தேவையில்லாத பரிசோதனைகளையெல்லாம் செய்துவருமாறு பரிசோதனைக்கூடங்களுக்கு நோயாளிகளை எப்படி அனுப்பி வைக்கிறார்கள், இத்தகைய பரிசோதனைக்கூடங்களில் இருந்து மருத்துவர்கள் எப்படி 30 – 50 சதவீத கமிஷன் பெறுகிறார்கள் என்பதை ‘நியூஸ் நேஷன்’ டி.வி. சேனல் ‘ஸ்டிங் ஆபரேஷன்’ என்னும் ரகசிய படப்பிடிப்பு வாயிலாக படம் பிடித்து, வெளியிட்டு, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
இது தொடர்பாக அதிரடி விசாரணைக்கு உத்தரவிட்டு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்சவர்தன் நாடாளுமன்றத்தில் நேற்று ஒரு அறிக்கை தாக்கல் செய்து பேசினார். 
 
அப்போது அவர் கூறியதாவது:–
 
டி.வி. நிகழ்ச்சி மூலம் அம்பலத்துக்கு வந்துள்ள இந்த விவகாரம் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் செயலாளர் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார். இது தொடர்பான டி.வி.டி., மற்றும் அதன் எழுத்து வடிவத்தை சமர்ப்பிக்குமாறு நியூஸ் நேஷன் சேனலுக்கு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
 
மேலும், எங்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்குகிற தன்னாட்சி அமைப்பான இந்திய மருத்துவ கவுன்சில், தனது நெறிமுறை குழுவின் கூட்டத்தை கூட்டி, நடவடிக்கை குறிப்புகளை இணையதளத்தில் வெளியிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது.
 
கமிஷன் (லஞ்சம்) பெறுகிற நடைமுறை, இந்திய மருத்துவ கவுன்சிலின் 2002 ம் ஆண்டு நெறிமுறைகளை மீறிய செயல் என்பதை சுட்டிக்காட்டி, இந்திய மருத்துவ கவுன்சில் தலைவருக்கு கடிதம் எழுதி உள்ளேன்.
 
சில மருத்துவர்கள் எம்.ஆர்.ஐ. ஸ்கேன், சி.டி.ஸ்கேன், அல்டிரா ஸ்கேன், வழக்கமான நோய் இயல் பரிசோதனைகள் போன்றவற்றில் 30 – 50 சதவீத கமிஷன் பெறுவது தொடர்பாக பேசுவதை மறைமுகமாக படம் பிடித்துள்ளனர்.
 
டெல்லியின் பழமையான பரிசோதனைக்கூடம் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற பல பரிசோதனைக்கூடங்கள் இதில் தொடர்புடையவர்கள் என காட்டப்பட்டுள்ளது.
 
எல்லோரையும் பொத்தாம்பொதுவாக ஒரே தராசில் வைத்து பார்த்து குறை கூறுவது சரி அல்ல. இருப்பினும் நெறிமுறை மீறிய இத்தகைய செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்களை அடையாளம் கண்டு, அவர்களை உன்னதமான மருத்துவத் தொழில் செய்வதில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கருதுகிறேன்.
 
மேலும், மருத்துவ தொழில் தொடர்பாக வெளிப்படையான தன்மையை கொண்டு வந்து அறிமுகப்படுத்த தேவையான யோசனைகளை கூறுவதற்கு பிரசித்தி பெற்ற மருத்துவர்கள், நுகர்வோர் சட்ட வல்லுனர்கள் ஆகியோரைக் கொண்ட குழு ஒன்றை எங்கள் அமைச்சகம் அமைக்கிறது என்று அவர் கூறினார்.