வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By Veeramani
Last Updated : செவ்வாய், 13 மே 2014 (12:09 IST)

டீசல் விலை உயர்வு - நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது

டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.32 உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரம் மற்றும் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் மாதத்தின் 1 மற்றும் 16 ஆகிய தேதிகளில் பெட்ரோல் விலையை நிர்ணயித்துக் கொள்ள பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு கடந்த 2010-ம் ஆண்டு ஜூன் மாதம் அனுமதி வழங்கியது.
 
இதேபோல், டீசலுக்கான விற்பனையில் நஷ்டத்தை ஈடுகட்டும் வரை மாதந்தோறும் 40 முதல் 50 காசுகள் வரை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் விலையை உயர்த்திக் கொள்வதற்கு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
 
இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு டீசல் விலை உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. கடந்த மார்ச் 1 ஆம் தேதிக்கு பிறகு ஏப்ரல் 1 மற்றும் மே 1 ஆம் தேதிகளில் டீசல் விலை உயர்த்தப்படவில்லை.
 
எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திக்கொள்ள தேர்தல் நேரத்தில் அனுமதிக்க கோரியதை தேர்தல் கமிஷன் நிராகரித்துவிட்டதால் ஏப்ரல், மே மாதங்களில் பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தவில்லை.
 
இந்த நிலையில் நேற்று 9-வது மற்றும் இறுதிகட்ட தேர்தல் முடிந்த சூட்டோடு சூடாக டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்திவிட்டன. அதாவது டீசல் விலை ஒரு லிட்டருக்கு 1 ரூபாய் 9 காசுகள் அதிகரிக்கப்பட்டது. இந்த விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
 
டெல்லியில் ஒரு லிட்டர், டீசல் வரிகள் உள்பட 1 ரூபாய் 22 காசுகள் உயர்த்தப்பட்டு 56 ரூபாய் 71 காசுகளாகவும், மும்பையில் ஒரு லிட்டர் டீசல் வரிகள் உள்பட 65 ரூபாய் 21 காசுகளாகவும் அதிகரித்தது. சென்னையில் டீசல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் 32 காசுகள் உயர்ந்து 60 ரூபாய் 50 காசாக அதிகரித்து உள்ளது.
 
இந்த விலை உயர்வுக்கு பின்பும், டீசல் விற்பனையில் ஒரு லிட்டருக்கு 5 ரூபாய் 71 காசுகள் நஷ்டம் ஏற்படுவதாக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. எனினும், பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 
 
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, குறைந்த நிலையில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 50 காசுகள் வரை எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்பட்டபோதும் பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.