1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: ஞாயிறு, 26 ஜூலை 2015 (11:25 IST)

இங்கிலாந்து அரசிடம் இருந்து எந்த உதவியையும் கோரவில்லை - சுஷ்மா ஸ்வராஜ்

லலித் மோடியின் போர்ச்சுகல் பயணத்திற்கு, பிரிட்டன் அரசிடம் எந்த உதவியும் கோரவில்லை என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
 

 
வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், கடந்த சில தினங்களுக்கு முன்பு, ’லலித் மோடியின் பயணத்திற்கு மனிதாபிமான முறையில் அவருக்கு உதவினேன்' என்று தெரிவித்து இருந்தார். இதையடுத்து, சுஷ்மா ஸ்வராஜ் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து நான்கு நாட்களாக பாராளுமன்றத்தில் குரல் எழுப்பி வருகி்ன்றன.
 
இந்நிலையில், நேற்று சுஷ்மா ஸ்வராஜ் டுவிட்டரில் பக்கத்தில், ’லலித் மோடி பயணத்திற்கு பிரிட்டன் அரசு ஒப்புதல் அளிக்கக் கோரி, அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர் கெய்த் வாஸிடம் நான் தெரிவித்ததாக கூறுவது முற்றிலும் பொய்யானது.
 
இதை, இப்போது மட்டும் அல்ல, திரும்ப திரும்ப எத்தனை முறை வேண்டுமானாலும் இதைத்தான் கூறுவேன். லலித் மோடியின் பயண ஆவணங்களுக்காக நான் பரிந்துரை செய்யவில்லை. அமைச்சர் என்ற முறையில் நான் பாராளுமன்றத்திற்கு பதிலளிக்க கடமைப்பட்டுள்ளேன்.
 
ஆனால், தேசத்திற்கு தெரிவிக்க டுவிட்டர் தான் ஒரே வழி என்பதால் இங்கு கூறுகிறேன். நாள்தோறும் மனிதாபிமான அடிப்படையில் பலருக்கு உதவுகிறேன். ஆனால், லலித் மோடி விவகாரத்தில் நான் பேசியது திரிக்கப்பட்டு, பொய் பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது’ என்று தெரிவித்துள்ளார்.