வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : புதன், 4 மார்ச் 2015 (11:52 IST)

”முகேஷ் சிங் மனிதனே இல்லை” - டெல்லி மாணவி கற்பழிப்பு விவகாரம் குறித்து சானியா மிர்ஸா

டெல்லி மாணவி கற்பழிப்பு விவகாரம் குறித்து சானியா மிர்ஸா தனது கடும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
 
கடந்த 2012 டிசம்பர் 16ஆம் தேதி, டெல்லியில் தனது நண்பருடன் சென்று கொண்டிருந்த மருத்துவ கல்லூரி மாணவியை 6 பேர் கும்பல் ஓடும் பேருந்தில் கற்பழித்தது. பின்னர் அந்த மாணவி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

 
இந்த வழக்கில் தொடர்புடைய 6 பேரும் கைது செய்யப்பட்டனர். ஒருவர் சிறையிலேயே தற்கொலை செய்து கொண்டார். இதில் அந்த பஸ்சின் டிரைவர் முகேஷ் சிங் என்பவர் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
 
இந்நிலையில், திகார் சிறையில் அடைக்கப்பட்டு முகேஷ் சிங், “பெண்கள் வீட்டு வேலைகள், வீடுகளை பராமரிக்கும் வேலைகளை மட்டுமே பார்க்க வேண்டும் என்றும் இரவு நேரங்களில் டிஸ்கோ கிளப்புகளை சுற்றுவது, இரவு நேரங்களில் பார்களுக்கு போவது, தவறான உடைகளை அணிவது போன்றவற்றை செய்யக்கூடாது” என்று கூறியிருந்தார்.
 
தற்போது இந்த சம்பவம் குறித்து டென்னிஸ் வீராங்கனையும் ஐக்கிய நாடுகள் சபையின் தெற்காசிய பிராந்திய மகளிர் நல்லெண்ண தூதருமான சானியா மிர்சா தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து அவர் கூறுகையில், “மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த நபர் அளித்த பேட்டியை பார்த்து எனக்கு கோபம்தான் வருகிறது. ஒரு பெண்ணை பலாத்காரம் செய்துவிட்டோமே என்கிற குற்ற உணர்ச்சி சிறிதும் இல்லாமல் பேட்டி அளித்துள்ள அவருக்கு மூளையில் ஏதோ பாதிப்பு இருக்க வேண்டும்.
 
நல்லபடியாக உள்ள யாரும் இப்படி செய்யவும் மாட்டார்கள், பேசவும் மாட்டார்கள். ஈவு இரக்கமின்றி பாலியல் பலாத்காரம் செய்துள்ள அந்த நபர் இன்னும் உயிருடன் இருக்கிறார் என்பதை நினைக்கையில் கோபம் வருகிறது” என்று கூறியுள்ளார்.