செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வெள்ளி, 6 மார்ச் 2015 (16:14 IST)

நிர்பயா குறித்த ஆவணப் படத்திற்காக ரூ.40 ஆயிரம் வாங்கிய முகேஷ் சிங்

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு மரணமடைந்த டெல்லி மாணவி நிர்பயா குறித்த ஆவணப்படத்திற்கு பேட்டியளித்துள்ள முகேஷ் சிங் ரூ.40 ஆயிரம் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
நிர்பயா என்ற புனைபெயரில் அழைக்கப்பட்ட, மருத்துவ மாணவி நிர்பயா கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி இரவு தனது நண்பருடன் திரைப்படம் பார்த்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த டெல்லியில் ஓடும் பேருந்தில் கொடூரமாக கற்பழிக்கப்பட்டார்.
 

 
மேலும், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதுடன், கொடூரமாகத் தாக்கப்பட்டு சாலையோரம் வீசப்பட்டார். அவருடன் சென்ற நண்பரும் கடும் தாக்குதலுக்கு உள்ளானார். பின்னர் அவர் பரிதாபமான நிலையில் உயிரிழந்தார்.
 
இந்த கற்பழிப்பு வழக்கில் கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளுள் ஒருவரான முகேஷ் சிங் என்பவனிடம்  பி.பி.சி.–4 குழுவினர் மற்றும் லெஸ்லி உட்வின் என்ற திரைப்பட தயாரிப்பாளர் இந்தியாவின் மகள் என்ற ஆவணப்படத்திற்காக பேட்டி கண்டார்.
 
இதற்காக திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் முகேஷ் சிங்கிடம், சிறை அதிகாரிகள் அனுமதியுடன் பேட்டியும் எடுத்தனர். குற்றவாளி முகேஷ் சிங் அளித்த பேட்டி முழுமையாக ஊடகங்களில் வெளியானது.
 
இந்நிலையில் முகேஷ் சிங்கிற்கு பேட்டி எடுக்க லெஸ்லி உட்வின் ரூ.40 ஆயிரம் வழங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆவணப்படத்திற்காக பல முறை முகேஷ் சிங்கிடம் பேட்டி எடுக்க உத்வின் முயன்று உள்ளார் ஆனால் முடியவில்லை.
 
பின்னர் உட்வினுக்கு திகார் சிறைச்சாலையில் முகேஷ் சிங்கை சந்தித்து பேட்டி எடுக்க  மத்திய உள்துறை அலுவலகத்தில் இருந்து அனுமதி கிடைத்து உள்ளது. அவருக்கு  பேட்டி எடுக்க முல்லர் என்பவர் உதவியுள்ளார்.
 
முதலில் இந்த பேட்டியெடுக்க முகேஷ் சிங் ரூ.2 லட்சம் கேட்டதாகவும், பின்னர் பேரம் பேசப்பட்டு ரூ.40 ஆயிரம் வழங்கபட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், முகேஷ் சிங்கின் வங்கி கணக்கில் வரவு வைக்கபட்டு, அந்த பணத்தை அவரது குடும்பத்தினர் எடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.