வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : வியாழன், 5 மார்ச் 2015 (22:25 IST)

யூடியூப்பில் 'இந்தியாவின் மகள்' ஆவணப்படம்: டெல்லி காவல்துறை வலியுறுத்தல்

தடையை மீறி 'இந்தியாவின் மகள்' ஆவணப்படத்தை ஒளிபரப்பிய பிபிசி மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், யூடியூப்பிலும் அந்த ஆவணப்படத்தை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்லி காவல்துறை வலியுறுத்தி உள்ளது.
 
இது தொடர்பாக மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சகத்திற்கு டெல்லி காவல்துறை எழுதியுள்ள கடிதத்தில், மேற்கூறிய ஆவணப்படத்தை இந்தியாவில் ஒளிபரப்ப தடை செய்துள்ள போதிலும், அந்த படம் யூடியூப்பில் இடம் பெற்றுள்ளதாகவும், எனவே அதனை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது.
 
முன்னதாக கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி டெல்லியில் ஓடும் பேருந்தில் இளம் பெண் ஒருவர் கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலையான சம்பவத்தில் தூக்கு தண்டனை பெற்றுள்ள குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங், டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
 
மேலும் அடுத்த பக்கம்..

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து 'இந்தியாவின் மகள்' என்ற பெயரில் ஆவணப்படம் ஒன்றை தயாரித்த பிரிட்டன் பட இயக்குநர் லிஸ்லீ உத்வின் மற்றும் பிபிசி செய்தியாளர் ஆகியோர் சிறைக்காவலில் உள்ள முகேஷ் சிங்கிடம் பேட்டி எடுத்தனர். இதையடுத்து, சிறைக்கைதியிடம் பேட்டி எடுக்க எப்படி அனுமதிக்கலாம் எனவும், இந்த ஆவணப்படத்தை ஒளிபரப்பக் கூடாது எனவும் எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பின.
 
இதற்கு பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ''இந்த பேட்டியை ஒளிபரப்ப நீதிமன்றம் மூலம் தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது. எனவே, அந்த பேட்டி ஒளிபரப்பாகாது. இந்த பேட்டி எடுக்க அனுமதி அளித்தது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்'' எனக் கூறியிருந்தார்.
 
இந்நிலையில், வரும் 8ஆம் தேதி மகளிர் தினத்தன்று ஒளிபரப்பவிருந்த 'இந்தியாவின் மகள்' ஆவணப்படத்தை ஒளிபரப்ப எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, நேற்று (4ஆம் தேதி) இரவே 10 மணியளவில் லண்டன் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இப்படம் ஒளிபரப்பு செய்யப்பட்டது. மேலும், இந்தியாவில் இப்படம் வெளியிடப்படாது எனவும், இதற்கான தடையை மத்திய அரசு நீக்க வேண்டும் எனவும் பிபிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், தடையை மீறி ஆவணப்படத்தை ஒளிபரப்பிய பிபிசி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ''இந்த ஆவணப்படத்தை ஒளிபரப்ப வேண்டாம் என்று கூறியும், பிபிசி நிறுவனம் அதை ஒளிபரப்பி இருப்பது வேதனையை தருகிறது. இதற்காக பிபிசி நிறுவனம் மீது இந்திய அரசின் சார்பில் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.