வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: செவ்வாய், 3 மார்ச் 2015 (15:13 IST)

ஆம் ஆத்மி உட்கட்சி பூசல்: அரவிந்த் கெஜ்ரிவால் வேதனை

ஆம் ஆத்மி கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் பிரச்சனைகளால் மிகுந்த வேதனைக்குள்ளாகியிருப்பதாக அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டுவிட்டரில் அவர் கூறியதாவது:-
 
"கட்சிக்குள் நடைபெறும் விவகாரங்களால் ஆழ்ந்த வேதனையில் இருக்கிறேன். இத்தகைய சர்ச்சைகளைப் பெரிதாக்குவது தேர்தலில் நம்மை வெற்றி பெறச் செய்த டெல்லி மக்களுக்கு நாம் செய்யும் துரோகமாகும். இந்த கேவலமான சர்ச்சைக்குள் சிக்க நான் விரும்பவில்லை. என் முழு கவனமும் டெல்லி மாநில நிர்வாகத்திலேயே இருக்கும்" என்று கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
 
ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள நிலையில், தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை நீக்க சதி நடந்துவருவதாக அதன் செய்தித் தொடர்பாளர் நேற்று குற்றம்சாட்டி இருந்தார்.
 
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் இரண்டாவது முறையாக போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. இந்நிலையில், பிரசாந்த் பூஷண் மற்றும் யோகேந்திர யாதவ் ஆகியோர், கட்சியின் செயல்பாடுகளை குறை கூறி செயற்குழு உறுப்பினர்களுக்கு கூட்டாக கடிதம் எழுதியதாக நேற்று முன்தினம் தகவல் வெளியானது.
 
இதுதவிர பிரசாந்த் பூஷண் தனியாக ஒரு கடிதம் எழுதியதாகவும் கூறப்படுகிறது. இந்தக் கடிதங்களில் கெஜ்ரிவாலின் தன்னிச்சையான செயல்பாடு குறித்தும் விமர்சனம் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
 
கட்சியை பலவீனப்படுத்தி, யோகேந்திர யாதவை தலைவராக்குவதற்காக பிரசாந்த் பூஷண், அவரது தந்தை சாந்தி பூஷண் மற்றும் யோகேந்திர யாதவ் ஆகியோர் முயற்சிப்பதாக கெஜ்ரிவால் தரப்பு கூறுகிறது.
 
இந்நிலையில், இத்தகைய சர்ச்சைகளால் தான் மிகுந்த வேதனைக்குள்ளாகியிருப்பதாக, அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.